×

மதசார்பின்மை தான் இந்தியாவின் ஆன்மா ஒரு மதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது: பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கண்டனம்

திருவனந்தபுரம்: மதசார்பின்மை தான் இந்தியாவின் ஆன்மா ஆகும். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தகவலில் கூறியிருப்பது: மதசார்பின்மை என்பது இந்தியாவின் ஆன்மா ஆகும். இது நம்முடைய தேசிய இயக்கத்தின் தொடக்க நாட்களில் இருந்தே நம்முடைய அடையாளத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. நம்முடைய சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும், ஒரு மதத்திலும் இல்லாதவர்களும் இடம் பெற்றனர். நம்முடைய நாடு அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானதாகும். மதம் என்பது ஒரு தனிப்பட்ட விவகாரமாகும். அனைத்து மதத்தினரும் சம உரிமைகளை அனுபவிக்கின்றனர் என்று அரசியலமைப்பின்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஆட்சியில் அமர்ந்தவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதோ, மற்ற மதங்களை தாழ்த்துவதோ கூடாது. ஆனால் இப்போது மதத்திற்கும், நாட்டுக்கும் இடையே உள்ள எல்லைக் கோடு சுருங்கி வருகிறது. அரசியலமைப்பு பொறுப்பை வகிப்பவர்கள் மதரீதியான சடங்குகளில் கலந்து கொள்வதை தவிர்த்த ஒரு காலம் இருந்தது. இப்போது அந்தக் காலகட்டத்தில் இருந்து நாம் பின்னோக்கி சென்று விட்டோம். ராமர் கோயில் விழாவை அரசு விழாவாக கொண்டாடுகின்றனர். இந்த விழாவில் கலந்து கொள்ள பலருக்கும் அழைப்பு வந்திருந்தது. ஆனால் அரசியல் சாசன உறுதி மொழியை ஏற்றுக் கொண்டவர்கள் அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மதசார்பின்மை தான் இந்தியாவின் ஆன்மா ஒரு மதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது: பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : India ,Pinarayi Vijayan ,PM Modi ,Thiruvananthapuram ,Kerala ,Chief Minister ,Modi ,Ram ,Temple ,ceremony ,Dinakaran ,
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...