×

வாழ்க்கையின் இறுதி வரை கற்றுக் கொண்டிருப்பதே வெற்றியின் ரகசியம்: எம்எல்ஏக்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுரை

ராய்ப்பூர்: வாழ்க்கையின் இறுதி வரை கற்றுக் கொண்டே இருப்பதே வெற்றியின் அடிப்படை ரகசியம் என்று சட்டீஸ்கர் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அமித் ஷா கூறினார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற புதிய திட்டங்களை கொண்டு வருவதற்கும், செயல்படுத்துவதற்கும் எதிர்கட்சி எம்எல்ஏக்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.

எந்தவொரு திட்டமும் அரசுக்கு மட்டும் சொந்தமல்ல. எதிர்கட்சி எம்எல்ஏக்களும் அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கற்றலுக்கு வயது இல்லை; அதற்கு காலமும் இல்லை. வாழ்க்கையின் இறுதி வரை கற்றுக் கொண்டே இருப்பதே வெற்றியின் அடிப்படை ரகசியம். எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள், மக்களின் பாரம்பரியத்தை தாங்குபவர்களாக இருக்க வேண்டும். எம்எல்ஏ என்பவர், அவரை தேர்வு செய்து அனுப்பிய தொகுதி மக்களுக்கு பொறுப்பானவர் ஆவார். அவர் சார்ந்த கட்சியின் சித்தாந்தம், ஒட்டுமொத்த மாநிலத்தின் முன்னேற்றம் என மூன்று வகையான பொறுப்புகள் அவருக்கு உள்ளன.

கட்சியின் கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்ற எம்எல்ஏக்கள் பாடுபட வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ‘இந்திரா ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திரா காந்தியின் பெயரில் இருந்தாலும் கூட நான் எம்எல்ஏவாக இருந்த போது, இத்திட்டத்தின் நன்மை கருதி அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தேன். எனவே ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் ஒன்றிணைந்து அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்’ என்றார்.

The post வாழ்க்கையின் இறுதி வரை கற்றுக் கொண்டிருப்பதே வெற்றியின் ரகசியம்: எம்எல்ஏக்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Home Minister ,Amit Shah ,RAIPUR ,Chhattisgarh ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்திற்காக...