×

வத்தலக்குண்டு கண்மாய் பகுதிகளில் வெளிநாட்டு விருந்தாளிகள் வருகை அதிகரிப்பு

வத்தலக்குண்டு, ஜன. 22: வத்தலக்குண்டு கண்மாய் பகுதிகளில் இந்தாண்டு வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பறவை ஆர்வலர்கள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வடநாட்டு பறவைகள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக உணவுக்காகவும், இன விருத்திக்காகவும் வருவதுண்டு. அதேபோல இந்த ஆண்டும் அதிக அளவில் வடநாட்டு பறவைகளும், வெளிநாட்டு பறவைகளும் வந்துள்ளன.

அவற்றை கணக்கெடுக்க வாழை சுற்றுச்சூழல் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. திண்டுக்கல் மாவட்ட பறவை ஆர்வலர் வாழைகுமார் தலைமையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பறவை ஆர்வலர்கள் 7 பேர் கொண்ட குழு வத்தலக்குண்டு பகுதியில் உள்ள குன்னுவாரன்கோட்டை கண்மாய், வெங்கடாஸ்திரி கோட்டை கண்மாய் உள்பட ஐந்து கண்மாய்களுக்கு அதிகாலை சென்று பைனாகுலர், கேமரா உதவியோடு ஆய்வு செய்தனர். அதில் பொரி உள்ளான், பெரிய நாணல் கதிர் குருவி, மரக்கதிர் குருவி உள்பட 155 வகையான பறவைகளை கண்டறிந்து பதிவு செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து 18 வகையான பறவைகள் வந்திருந்தது. மேலும் வட இந்தியாவிலிருந்து 10 வகையான பறவைகள் வருகை புரிந்திருந்தது. ஐரோப்பாவில் இருந்து 218 ஊசிவால் வாத்துக்கள் வந்திருந்தது. இது குறித்து வாழைகுமார் கூறுகையில், வத்தலக்குண்டு பகுதியில் அனைத்து கண்மாய் புறங்களிலும்அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு மேலும் இயற்கை வளத்தை கூட்ட வேண்டும். குன்னுவாரன்கோட்டை கண்மாயை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

The post வத்தலக்குண்டு கண்மாய் பகுதிகளில் வெளிநாட்டு விருந்தாளிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Vatthalakundu Kanmai ,Vathalakundu ,Dindigul District ,Vatthalakundu ,
× RELATED வத்தலக்குண்டுவில் இரு முதியவர்கள் சடலம் பூட்டிய வீட்டிற்குள் மீட்பு