வத்தலக்குண்டு, ஜூலை 22: வத்தலக்குண்டுவில் ஆயுதங்களுடன் ரகளை செய்த இளைஞர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில், சில தினங்களுக்கு முன்பு ஒரு மைனர் பெண் கடத்தப்பட்டார். இது தொடர்பாக வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து அப்பெண் மீட்கப்பட்டார்.
இந்நிலையில் இளைஞர்கள் சிலர் குடிபோதையில் இக்கிராமத்திற்குள் புகுந்து ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் வத்தலக்குண்டு காவல்நிலையம் முன்பு திடீரென திரண்டனர்.
மைனர் பெண்ணைக் கடத்திய இளைஞரையும், குடிபோதையில் ஆயுதங்களுடன் ரகளை செய்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சிலைமலை மற்றும் போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
The post வத்தலக்குண்டுவில் காவல்நிலையம் முற்றுகை appeared first on Dinakaran.