×

ஊட்டியில் மீண்டும் பனிப்பொழிவு தீவிரம் மரவியல் பூங்காவில் செடிகளை பாதுகாக்க தண்ணீர் பாய்ச்சல்

 

ஊட்டி, ஜன.22: ஊட்டியில் மீண்டும் பனிப்பொழிவு தீவிரம் காட்ட துவங்கியுள்ள நிலையில் மரவியல் பூங்காவில் அலங்கார செடிகள் பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் பனிப்பொழிவு துவங்கும். ஆரம்பத்தில் நீர்பனிப்பொழிவாகவும், அதன் பின்னர் உறைபனி பொழிவு துவங்கி பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும்.  இந்த சமயத்தில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும். உறைபனி சமயத்தில் புல் மைதானங்கள், தேயிலை தோட்டங்களில் உறைபனி கொட்டும்.

புல்வெளிகளில் கொட்டி கிடக்கும் பனியை பார்ப்பதற்கு வெள்ளை கம்பளம் விரித்து போல் காணப்படும். இதன் காரணமாக தேயிலை செடிகள், வனங்களில் செடி கொடிகள், புற்கள் கருகி காய்ந்து விடும். இந்நிலையில் நவம்பர் இறுதி வாரத்தில் பனிப்பொழிவு துவங்கியது. அதன் பின் டிசம்பரில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயல் போன்றவைகளால் உறைபனி பொழிவு தள்ளி போய், இம்மாத துவக்கம் முதல் கடுமையான உறைபனி பொழிவு இருந்து வருகிறது. உறைபனி பொழிவின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.

இதனால் அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊட்டி அருகே தலைக்குந்தா, சோலூர் மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி வரை சென்றது. கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை மற்றும் வனங்களில் செடி, கொடிகள் கருக துவங்கியுள்ளன.

பனிப்பொழிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஊட்டி மரவியல் பூங்காவில் உள்ள அலங்கார செடிகள் பாதிக்காமல் இருக்கும் வகையில் தாகை செடிகள் கொண்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர காலை மற்றும் மாலை நேரங்களில் ஊழியர்கள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

The post ஊட்டியில் மீண்டும் பனிப்பொழிவு தீவிரம் மரவியல் பூங்காவில் செடிகளை பாதுகாக்க தண்ணீர் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Arboretum ,Nilgiri district ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்