×

ராமர் கோயில் குடமுழுக்கை ஒட்டி கோயிலில் சிறப்பு பூஜைக்கு தடை விதித்ததாக பொய் செய்தி வெளியிட்ட தினமலர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: தமிழக அரசு அறிக்கை

சென்னை: ராமர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாக பொய் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும்.

அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடைவிதித்துள்ளது என தினமலர் நாளிதழில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் தீயநோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தினமலர் நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளில் ஒரு சிறு குறையும் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் 400 ஆண்டுகளுக்குப்பின், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உட்பட 1,270 திருக்கோயில்களுக்கு முதல்வரின் அறிவுரையின்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் 764 திருக்கோயில்களில் தினசரி அன்னதானம் வழங்கும் பணிகள் நடைபெற்று பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இதுதவிர, ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்திடும் வகையில் 2022-23ம் நிதியாண்டில் 113 திருக்கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24ம் நிதியாண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய வழிபாட்டு உணர்வுகளில் ஊறியுள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த உண்மை புரியும். மாற்றுக் கருத்துடைய எதிர்க்கட்சிகள் கூட இதனை மறுக்க முடியாது.

இந்நிலையில் திருக்கோயில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி, நாள்தோறும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராமர் கோயில் குடமுழுக்கை ஒட்டி கோயிலில் சிறப்பு பூஜைக்கு தடை விதித்ததாக பொய் செய்தி வெளியிட்ட தினமலர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: தமிழக அரசு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Dinamalar ,Ram ,temple ,Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,Ram temple ,temple Kudamuzukkai ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...