×

ஆபாச செயலி மூலம் அழைத்து வாலிபரிடம் பணம் பறித்த கும்பல்; நெல்லையில் பரபரப்பு

நெல்லை: தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லையிலும் ஆபாச செயலி மூலம் வரவழைத்து, வாலிபரிடம் ரூ.80 ஆயிரம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கிரைண்டர் எனப்படும் ஓரின சேர்க்கையாளர்களுக்கான ஆபாச செயலியினை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த ஒன்றிய அரசு ஊழியர் ஒருவரை இந்த செயலி மூலம் சாட்டிங் செய்து வரவழைத்து, காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று, பணம், செல்ேபான் நகை பறித்த கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது.

மேலும் அதே செயலியை பயன்படுத்தி, 2 வாலிபர்களை கடத்திச் சென்று பணம், செல்போன் பறித்த 5 இளம்சிறார்களும் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு இந்த செயலியை பயன்படுத்தி ேமாசடியில் ஈடுபட்டதாக 5 வழக்குகளும், நெல்லை மாவட்டத்தில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த செயலி மூலம் மோசடியில் மீண்டும் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நெல்லை அருகேயுள்ள பிராஞ்சேரியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாளையில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.

நள்ளிரவில் அவர் இணைந்துள்ள ஆபாச செயலியில் சாட்டிங் செய்த நபர், அவரிடம் நைசாக பேசி திருச்செந்தூர் ரோட்டிற்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அவர்கள் சென்றபோது அங்கு ஏற்கனவே 4 பேர் காத்திருந்துள்ளனர். பின்னர் அவர்கள் 5 பேரும் சேர்ந்து அந்த வாலிபரை தாக்கி, மிரட்டி அவரது செல்போனில் உள்ள கூகுள் பே மூலம் ரூ.40 ஆயிரத்தை தங்கள் கணக்கிற்கு மாற்றிக் கொண்டனர். அவரது ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்று திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஏடிஎம்மில் ரூ.40 ஆயிரத்தையும் எடுத்துள்ளனர். மேலும் அந்த வாலிபரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாளை. தாலுகா போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

The post ஆபாச செயலி மூலம் அழைத்து வாலிபரிடம் பணம் பறித்த கும்பல்; நெல்லையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nella ,Thoothukudi ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...