×

தனுஷ்கோடி சேது தீர்த்த கடலில் மோடி புனித நீராடி சிவ வழிபாடு

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி சேது தீர்த்த கடலில் இன்று பிரதமர் மோடி புனித நீராடி சிவ வழிபாடு செய்தார். தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னை வந்தார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த தேசிய அளவிலான கேலோ விளையாட்டு போட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் துவக்கி வைத்தார். இரவில் கிண்டி ஆளுநர் ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்து நேற்று காலை திருச்சி வந்த பிரதமர் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்தார்.

பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2 மணிக்கு ராமேஸ்வரம் வந்தார். ராமகிருஷ்ண மடத்தில் சிறிதுநேரம் ஓய்வு எடுத்த பிரதமர் பிற்பகல் 3.20 மணிக்கு அக்னி தீர்த்தக்கடலில் நீராடினார். அங்கிருந்து ராமநாத சுவாமி கோயிலுக்கு வந்து, 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டார். மாலை 5 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நடந்த ராமாயண பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இரவில் ராமகிருஷ்ண மடத்தில் ஓய்வு எடுத்த பிரதமர், இன்று காலை 9 மணிக்கு ராமகிருஷ்ண மடத்தில் இருந்து காரில் புறப்பட்டு, 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு சென்றார். செல்லும் வழியில் ஆங்காங்கே கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்தபடியே சென்றார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மலர் தூவியும், ஜெய் ராம் என்று கோஷமிட்டு ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

தனுஷ்கோடி சென்ற பிரதமர் பாக் ஜலசந்தி-மன்னார் வளைகுடா கடல் சந்திக்கும் ராம் சேது தீர்த்தம் பகுதியில் நீராடி சிவ வழிபாடு நடத்தி கடலில் புஷ்பாஞ்சலி செய்தார். இந்த நிகழ்ச்சியில் சாதுக்கள் பலர் பங்கேற்றனர். பின் அங்கிருந்து புறப்பட்டு விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெற்ற கோதண்டராமர் கோயிலுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு கோதண்டராமரை வழிபட்டார். பின் ராமேஸ்வரம், தனுஷ்கோடி சேது தீர்த்த யாத்திரையை முடித்து அங்கிருந்து காரில் புறப்பட்டார். காலை 11.10 மணிக்கு ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயா ஹெலிபேட் தளத்திற்கு வந்த பிரதமர் 11.20 மணிக்கு ஹெலிகாப்டரில் மதுரை புறப்பட்டு சென்றார்.

போக்குவரத்து நிறுத்தம்
பிரதமர் தனுஷ்கோடி சென்றதையொட்டி இன்று காலை 6 மணி முதல் ராமேஸ்வரம் ஹெலிபேட் தளம் வரை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருசக்கர வாகனம் தவிர மற்ற வாகனங்கள் எதுவும் சாலையில் அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. ராமேஸ்வரம் கோயில் நகர் பகுதி முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நகர் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் உள்ளூர் மீனவ மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், மீனவர்கள் என்று பரபரப்பாக இருக்கும் தனுஷ்கோடி பகுதி வெறிச்சோடியது. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்காததால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். ராமேஸ்வரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

3 அடுக்கு பாதுகாப்பு
ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வந்து, பகல் 12.35 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். பிரதமர் வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் மதுரை நகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் இரு துணை கமிஷனர்கள் மற்றும் 500 போலீசார் விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வந்த வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், அதி விரைவு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post தனுஷ்கோடி சேது தீர்த்த கடலில் மோடி புனித நீராடி சிவ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : MODI ,SHIVA ,DHANUSHKODI ,SETU ,RAMESWARAM ,PM ,DANUSHKODI SETU ,Narendra Modi ,Chennai ,Tamil Nadu ,Nehru Stadium ,Dhanushkodi Setu ,
× RELATED தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை…கடலில் நீந்திய வாண்டுகள்