×

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடன் விவாகரத்து சோயிப் மாலிக் 3வது திருமணம்: பாகிஸ்தான் நடிகையை மணந்தார்

கராச்சி: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் பிரபல நடிகை சனா ஜாவித்தை 3வதாக திருமணம் செய்து கொண்டார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவருக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கிற்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்தது. 2002ம் ஆண்டு ஆயிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து 8 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பிறகு விவாகரத்து செய்த சோயிப் மாலிக், அதன்பின்னர் சானியா மிர்சாவை 2வதாக திருமணம் செய்தார். இவர்கள் துபாயில் வசித்து வந்தனர்.

சானியா- சோயிப் மாலிக் தம்பதிக்கு 5 வயதில் இசான் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் சானியா, சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அவர்கள் பிரிந்து வாழ்வதாக கடந்த 2022ம் ஆண்டு முதல் தகவல் பரவின. இந்தநிலையில் 41 வயதான சோயிப் மாலிக் 3வதாக 30 வயதான பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் சானியா மிர்சாவை அவர் விவாகரத்து செய்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் சோயிப் மாலிக் பகிர்ந்து உள்ளார்.

கடந்த ஆண்டு நடிகை சனா ஜாவித் பிறந்த தினத்தில் சோயிப் மாலிக் வாழ்த்து தெரிவித்து சனாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து இருந்தார். சோயிப் மாலிக் திருமணம் செய்துள்ள நடிகை சனா ஜாவித் பாகிஸ்தானில் பல முன்னணி டிவி தொடர்களில் நடித்தவர். பல படங்களிலும் நடித்துள்ளார். 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பாடகர் உமைர் ஜெய்ஸ்வாலை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார். 2 மாதங்களுக்கு முன்பு இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். அதை தொடர்ந்து தற்போது சோயிப் மாலிக்-சனா ஜாவித் திருமணம் நடந்துள்ளது.

* சோயிப்பை விவாகரத்து செய்தது சானியாதான்
இந்த விவாகரத்து குறித்து சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில்,’ சானியா- சோயிப் இடையே நடந்த விவாகரத்து குலா முறையில் நடந்தது. குலா என்பது ஒரு முஸ்லீம் பெண் தனது கணவரை ஒருதலைப்பட்சமாக விவாகரத்து செய்யும் உரிமையைக் குறிக்கிறது’ என்றார்.

The post இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடன் விவாகரத்து சோயிப் மாலிக் 3வது திருமணம்: பாகிஸ்தான் நடிகையை மணந்தார் appeared first on Dinakaran.

Tags : Sania Mirza ,Shoaib Malik ,Karachi ,Sana Javid ,
× RELATED பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணிக்கு மிதமான நிலநடுக்கம்