×

சென்னை-மைசூர் இடையே அதிவேக புல்லட் ரயில் திட்டம்: விரிவான அறிக்கை தயாராகிறது

சென்னை: சென்னை – மைசூர் இடையே அதிவேக புல்லட் ரயில் திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. ரயில் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத்தை காட்டிலும் அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயிலானது பயணிகளின் பயண நேரத்தை மேலும் குறைக்கும். எனவே, புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், அதிவேக ரயில்களை கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை வரை செல்லும் வகையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி, கடந்த 2017 செப்டம்பரில் அடிக்கல் நாட்டினார்.

ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடனும் நிதி உதவியுடனும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புல்லட் ரயிலின் முதல் ரயில் பாதைக்கான கட்டுமான பணி 2026 ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புல்லட் ரயில் மூலம் 435 கிலோமீட்டர் தூரம் கொண்ட சென்னை – மைசூர் இடையேயான பயணத்தை வெறும் ஒரு மணி, 40 நிமிடங்களில் புல்லட் ரயில் சேவை மூலம் கடக்கலாம். சென்னையில் இருந்து மைசூர் வரை செல்ல பேருந்தில் சராசரியாக 12 மணி நேரமும், ரயிலில் சராசரியாக 10 மணி நேரமும், விமானத்தில் சென்றால் சராசரியாக 1 மணி நேரம் 30 நிமிடமும் ஆகின்றன. இந்த புல்லட் ரயில் மூலம் விமானத்திற்கு இணையான நேரத்தில் மைசூரை சென்றடைய முடியும். தேசிய நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து தேசிய அதிவேக ரயில் நிறுவனம் இதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்க உள்ளது. ஜனவரி மாதம் தொடங்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 6 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு தேசிய அதிவேக ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இதற்கான பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும்.

இந்த புல்லட் ரயில், சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சிந்தூர், பங்காரபேட், பெங்களூரு, சன்னாபட்னா, மண்டியா வழியாக மைசூருக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தை பொறுத்தவரை 1435 மில்லிமீட்டர் இடைவெளி கொண்டதாக ஸ்டாண்டர்ட் கேஜ் அடிப்படையில் அமைக்கப்படும். இந்த ரயிலில் 750 பயணிகள் வரை பயணிக்கலாம். DS-ATC சிக்னலிங் வசதி ஏற்படுத்தப்படும். மேல் மின்சார கம்பி வழித்தடமான 25 கிலோவாட் ஏசி வகையை சேர்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலநடுக்கத்தை உணரும் தொழில்நுட்பம் புல்லட் ரயிலில் பொருத்தப்படும். அதாவது, ரயில் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதை உணர்ந்து ரயிலின் தானியங்கி பிரேக் செயல்படத் தொடங்கிவிடும். உடனே அதே பகுதியில் புல்லட் ரயில் நின்றுவிடும். இது போன்று பல நவீன வசதிகளுடன் தொடங்கப்படும் புல்லட் ரயிலை ரயில் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

The post சென்னை-மைசூர் இடையே அதிவேக புல்லட் ரயில் திட்டம்: விரிவான அறிக்கை தயாராகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mysore ,Union Government ,-Mysore ,
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...