×

துக்க வீட்டில் மாலைக்கு பதில் பணம்: தஞ்சை அருகே நெகிழ்ச்சி


தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் தெற்கு தெருவை சேர்ந்த கலியமூரத்தி மகன் திருப்பதி(35). தச்சு தொழிலாளி. கடந்தாண்டு டூவீலரில் ஒரத்தநாடு – மன்னார்குடி சாலையில் சென்றபோது பொட்டலங்குடி காடு என்னும் இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. படுத்த படுக்கையாகவே இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு திருப்பதி இறந்தார். ஓராண்டு காலமாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததால் திருப்பதி குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் திருப்பதியின் இறுதிச்சடங்கு அவரது வீட்டில் நேற்று நடைபெற்றது. அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாலைக்கு பதில், பணமாக கொடுத்தால் அவரது குடும்பத்துக்கு பயனாக இருக்கும் என திருப்பதியின் நண்பர்கள் யோசித்தனர். பின்னர், திருப்பதிக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாலை வாங்கி வர வேண்டாம். அதற்கு பதிலாக பணமாக தாருங்கள் என சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. இந்த பதிவு வைரலானது.இதனிடையே மொத்தமாக 20 மாலைகளை வாங்கி வந்து துக்க வீட்டில் வைத்திருந்தனர். அதன் அருகே ஒரு சில்வர் தவலையும் வைக்கப்பட்டது. அஞ்சலி செலுத்த வந்த உறவினர்கள், நண்பர்கள் ஒரு மாலையை எடுத்துக்கொண்டு, அருகில் வைக்கப்பட்டிருந்த தவலையில் ரூ.100 முதல் 1000 வரை தங்களால் இயன்றதை போட்டனர். அஞ்சலி செலுத்திய மாலையை மீண்டும் எடுத்து வைத்துக்கொண்டனர்.

இது குறித்து திருப்பதியின் உறவினர் பிரபு கூறுகையில், இறந்த திருப்பதிக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது இறுதி சடங்கில் மாலைக்கு பதில் ரூ.35,350 ரொக்கம் கிடைத்தது. இந்த தொகை இப்போதைய சூழ்நிலையில் அந்த குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம். இனி வரும் காலங்களில் துக்க நிகழ்வில் மாலைக்கு பதிலாக பணமாக கொடுத்து உதவ திட்டமிட்டுள்ளோம் என்றார்.

The post துக்க வீட்டில் மாலைக்கு பதில் பணம்: தஞ்சை அருகே நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thanjai ,Kalyamoorathi ,Tirupathi ,Okanadu Pailaiur South Street ,Orathanadu, Tanjai District ,Orathanadu-Mannarkudi road ,Doowheeler ,Tanjai ,
× RELATED தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி...