×

சக்தி தத்துவம்: ‘‘பஞ்ச பாண பைரவியே’’

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

அபிராமி அந்தாதி ; சக்தி தத்துவம்

திருப்பணந்தாளில் அருள்புரியும் சிவபெருமானுக்கு பெரியநாயகி அருணஜடேஸ்வரர் என்ற பெயரைக் கொண்டு அறியலாம். இதையே `தவ பெருமார்க்கு’ (65) என்பதனால் அறியலாம். “வேணி” என்பதற்கு பின்னிய கூந்தல் என்று பொருள். பகீரதன் என்பவன் கங்கையை தன் முன்னோர்களின் முக்திபேற்றுக்காக வானுலகத்தில் இருந்து இப்பூவுலகிற்கு அழைத்து வர முயல்கிறான்.கங்கை அவனிடத்து சினம் கொண்டு மிக வேகமாக வர முயல்கிறாள்.

அப்படி வந்தால், இந்த உலகமே அழிந்து போகும் இந்த உலகத்தை காத்து பகீரதனுக்கு அருள, தலையில் கங்கையை தாங்கிக் கொண்டார். அவள் வெளிப்படாமல் ஜடையை நன்கு பின்னிக் கொண்டார். அப்படி கங்கையை முடிந்து கொண்ட தோற்றத்திற்கு ‘கங்காதரர்’ என்று பெயர். உலக நன்மைக்காக பின்னிய ஜடையில் இருந்து ஒரு கற்றையை அவிழ்த்து அதன் மூலம் கங்கையை வெளிப்படுத்தியவருக்கு, ‘கங்கா விசர்ஜனர்’ என்று பெயர். இந்த பின்னிய முடி உடைய சிவபெருமான் என்பதை “வேணி பிரான்” என்கிறார்.

“ஒருகூற்றை” என்பதனால் சிவபெருமானுடைய பாதி உடலை தன் தவத்தினால் பரித்தவள் உமையம்மை. உலகில் உள்ளோர் மணம் முடித்த பின் மணமக்களை வாழ்த்துவர் அந்த வாழ்த்தில் கணவனின் அன்பு பெருக வாழ்க என்பர். கணவனாவன் பிறபெண்களிடத்து அன்பு கொள்ளாதவனாய் வாழ்க என வாழ்த்துவர்.

அது பார்வதியை பொறுத்தமட்டில், சிவபெருமானின் உடலிலேயே பாதியை பெற்று வாழ்பவள் என்பதை ‘வவ்விய பாகத்து இறைவரும் நீயும்’ (18) என்பதனால் அர்த்தநாரீஸ்வரரையும் குறிப்பிட்டு “வேணி பிரான் ஒரு கூற்றை” என்கிறார்.

“மெய்யில் பறித்தே
குடி புகுதும்’’

கேதாரகெளரியானவள், மரகதலிங்கத்தைப் பூஜித்து சிவபெருமானுடைய உடலில் பாதியை பெற்றதாக தல புராணம் குறிப்பிடுகிறது. திருச்செங்கோட்டில் உள்ள சிவபெருமான் லிங்க வடிவத்தில் இல்லாமல், வெண்பாஷனம் என்ற ஒரு விதமான மூலிகைகளாலான பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் இருக்கிறது. ப்ருங்கி என்று ஒரு முனிவர் இருந்தார். இவர் சிவபெருமானை மட்டுமே வணங்குபவராக இருந்தார். சிவபெருமானை மட்டும் உமையம்மையை நீக்கி வணங்க, தன் தவவலிமையால் வண்டு உருவம் கொண்டு சிவபெருமானை மட்டுமே சுற்றி வணங்கி விடைபெற்றார்.

இதை அறிந்து சினமுற்ற பார்வதி, அந்த முனிவரின் ஆற்றலை குறைக்க உடலில் உள்ள சிவாம்சம், சக்தி அம்சம், உடலில் மாமிசம் தவிர மற்ற அனைத்தும் சிவாம்சமாகும். என் அம்சமான மாமிசம் உன்னிடத்து இல்லாமல் போகட்டும் என்று சபித்தாள். அதனால், மாமிசம் நீங்கி எலும்புக்கூடாக நிற்க முடியாமல் தடுமாறினார். சிவபெருமானோ, இருவரையும் சமாளிக்கும் விதத்தில் அவன் சாயாது இருக்க ஒரு தண்டத்தை அருளினார். உமையம்மையானவள், தான் செய்த தவற்றை உணர்ந்து வருந்தி, ப்ருங்கி முனி மீது கொண்ட அன்பையும், அருளையும் கண்டு வியந்தாள்.

அவன் அருளாலேயே அதை சாதிக்க எண்ணியும் உங்களுக்கு விருப்பம் உடைய பொருள் யாது என்று வினவினாள். யாம் விரும்புவது தவமாகிய பூசனையே ஆகுமென்றார். கௌரியானவள், அதைதான் செய்ய விரும்பி தவ வாழ்க்கை மேற்கொண்டு மரகதலிங்கத்தை பூசிக்க ஆரம்பித்தாள். சிவபெருமான், அவள் தவத்திற்கும் பூசனைக்கும் முன் தோன்றி யாது வேண்டும் என வினவினார். உமையம்மையோ பிருங்கி முனிவரை மனதில் கொண்டு இருவராக இருப்பதனால்தானே இடையில் வண்டாக புகுந்து இறைவனை மட்டும் வணங்கினான். அதனால் தங்களிடமிருந்து என்னை இரண்டாகப் பிரிக்க முடியாதபடி தங்கள் உடலில் பாதியும் என் உடலில் பாதியும் சேர்ந்த ஓர் உடல் வேண்டும் என்றாள். சிவனோ தந்தோம் என்றார்.

அதன்படி, பாதி ஆண் உடலும், பாதி பெண் உடலும் கொண்டு உருவான மூர்த்தியே அர்த்தநாரீஸ்வரர். அந்த வடிவத்தையே இங்கே “மெயில் பறித்தே குடி புகுதும்’’ என்று உமையம்மையானவள், சிவபெருமானிடம் உடலை பறித்துதான் குடி புகுந்தாள் என்று தல வரலாற்றுக் குறிப்பு சூட்டி விளங்குகிறார். மேலும், தீபாவளி அன்று கேதாரகௌரி விரதம் என்ற விரதத்தை இன்றும் மகளிர் அனைவரும் செய்கின்றனர். நோன்பு மேற்கொண்டு கணவன் மனைவியிடத்தில் அன்பு பெருக வேண்டுகின்றனர். இந்த அர்த்தநாரீயானவர் அவ்வாறு கணவன் – மனைவி இடையே அன்பு பெருக வாழ்த்துகிறார்.

இதை ‘உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து’ (31) அறியலாம். ஆகம சாஸ்திரங்கள், அந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை வழிபடுவது குறித்து ஐந்து பலன்களை குறிப்பிடுகிறது. சக்தி பாகத்தில் விளங்க தோன்றி பூசனை செய்தால் இல்லறம் மலரும் சிவ பாகத்தை விளங்கத் தோன்றி பூசனை செய்தால், துறவறம் வளரும். இரண்டு பாகத்தையும் ஒருங்கே சமமாக பூசனை செய்தால், ஆத்மஞானம் தோன்றும். இந்த ஆத்மஞானம் தோற்றத்தினால், வாழும் போது உடலுக்கு தகுந்த அனைத்து நன்மைகளையும் உயிருக்கு மோட்சத்தையும் வழங்கும் சிறப்புடையது.

மேலும், திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று [மலை உச்சியில் ஜோதியானது ஏற்றப்படும்] உமையம்மையும், சிவபெருமானும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் உருவத்தையே புறப்பாடு செய்து தீபத்தை ஏற்றுகின்றனர். இதை “மெய்யில் பறித்தே குடிபுகுதும்’’ என்பதனால் ஒரே ஜோதியில் சிவசக்திகள் இணைந்து காட்சி அளிப்பதை பட்டர் குறிப்பிடுகிறார்.

திருச்செங்கோடு, திருவண்ணாமலை, ஐயாரப்பர் சந்நதியில் கோஷ்டம், ஆகிய தலங்களில், உமையம்மை அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிப்பதை கொண்டு நாம் இதை உணரலாம். சைவ சித்தாந்தம் தனது முடிந்த கொள்கையை ‘எங்கு எத்தெய்வம் ஆயினும் அங்கு அத்தெய்வம் ஆகி மாதொரு பாகனார் தான் வருவார்’ என்பதை வெளியிடுகிறது. இந்த அர்த்தநாரீயானவர் தானே எடுத்து அந்தந்த தேவர்கள் என்னென்ன அருள்வார்களே அதையே அருளும் ஆற்றல் உடையது. இந்த அர்த்தநாரீஸ்வரையே “மெய்யில் பறித்தே குடிபுகுதும்’’ என்கிறார்.

“பஞ்ச பாண
பைரவியே’’

என்பதனால் தாமரை, மாம்பூ, மல்லிகை, அசோகம், அல்லி என ஐந்து மலர்கள் இணைந்த பூங்கொத்தை கையில் வைத்து அவளை வணங்க வேண்டும். வரம் தரும் வரத முத்திரை கொண்டவளாய், அஞ்சுவோருக்கு அபயம் தரும் அபயமுத்திரை கொண்டவளாய், பைரவரின் சக்தியாக திகழ்பவளாய் உமையம்மையை தியானிக்கிறார். இந்த உமையம்மை காமாக்யா என்ற இடத்தில் எழுந்தருளியிருக்கிறாள்.

உமையம்மையை வழிபடும் இடங்களில் மிகச் சிறப்பு பெற்ற கோயில்களை சக்தி பீடம் என்பர். அந்தப் பீடத்தில் தலையாயதாக விளங்குவது காமாக்யா சக்தி பீடமாகும். இது உலகியல் செல்வமாகிய பதினாறு பேற்றையும் தரவல்ல சக்தியின் வடிவத்தையே பஞ்ச பாண பயிரவியே என்ற சக்தி பீடத்தை குறிப்பிடுகிறார். அதில் சிவபெருமான் ஆனந்த பைரவராக எழுந்தருளி இருப்பதால் அவர் சக்தியாகிய உமையம்மையை பைரவியே என்கிறார். அந்தத் தியானத்தை வடமொழியிலே தந்துள்ளோம்.

‘ரவி ஷசி யுத கர்ணா குங்குமா பீதவர்ணா
மணி கண வீ சித்ரா லோல ஜீஹ்வா த்ரிநேத்ரா
அபயவரத ஹஸ்தா சாக்ஷ சூத்ர ப்ரஹஸ்தா
ப்ரணதர சுற நரே ஷா சித்த காமேஷ் வரிச
அருண கமல சமஸ்தா ரக்த பத்மாச னஸ்தா
நவ தருண சரீரா யுக்த கே சீ சுஹாரா
சவ ஹ் ருதி ப்ருது துங்கா ஸ்வாங்க்ரி‌ யுக்மா மனோக்ஞா
சி ஷு ரவி சம வஸ்த்ரா சர்வ காமேஷ் வரீஷ
விபுள விபவ தாத்ரீ ஸ்மேர வக்த்ரா சுகேசீ
தந்த கரள கரக தந்தா சாமீ சந்த்ரா வனப்ப்ரா
மன சிஜ த்ருஷ திஸ்தா யோனி முத்தராம் லசந்தி
பவன ககன சப்தாம் சம் ஸ்ருத ஸ்தான பாகா
சின்த்யா சைவம் தீப்யத் அக்னி ப்ரகாசா
தர் மார்த்ததை: வைரவாக்கியா வாஞ்சிதார்த:’

இந்த வடமொழி தியானமானது “பஞ்ச பாண பயிரவியே’’ என்று பெயராக குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் சொல்லை நோக்கி சாத்திரத்தில் உள்ளபடி வடமொழியில் இங்கே பதிவு செய்திருக்கிறோம். காமாக்கியா பீடத்தின் தியானமே இது. இதை பாராயணம் செய்வோர் விரும்பிய பலனை அடைவர் என்கிறது காளிகா புராணம். சாக்த தந்திரத்தின் படி உமையம்மையை ஐந்து வடிவங்களாக வணங்குவர். இதை பஞ்சாசாரிகள் என்பர். சாரிகா என்றாள், பெண் கிளி என்று பொருள். அபிராமிபட்டர் ‘கிளியே’ (16) என்பதனால் உறுதி செய்யலாம்.

அந்தவகையில் உமையம்மையின் உருவம்

♦கலா மூர்த்தி என்று அறுபத்தி நான்கு அவயவங்களுடன் முழு உருவமாய் அமைத்து வழிபடுவர். ‘சதுஸ் சஷ்டி கலாத்மிகா’ என்ற ஸஹஸ்ரநாமத்தால் அறியலாம்.
♦உமையம்மையின் யந்திரத்தை மட்டுமே வைத்து வழிபடுவர்.
♦உலகில் உள்ள மகளிர்களை உமையாக கருதி வழிபடுவர். ‘பெற்ற தாயும்’ (2) என்பதனால் உணரலாம்.
♦ சில பொருள்களை வைத்து இந்தப் பாடலை பொருத்தவரை ஐந்து பூக்கள் அதையே உமையம்மையாக கருதி வழிபடுவர் இதை தாந்திரீகம் என்பர்.
♦பீடம் என்பது ஒரு அடையாளம் ஆகும் ஒரு கல்லையோ அல்லது தாமரை போன்ற வடிவத்தையோ, பலியிடும் கொலைக் கருவிகளையோ, தீர்த்தங்களையோ.

உமையம்மையாகக் கருதி வழிபடுவர். இதையே சக்திபீடங்கள் என்பர். சிவாலயங்களில் காணப்படும் பலிபீடம் என்பது ருத்ரபீடம் என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாக்த ஆகமங்களில் மட்டும் அதையே சக்திபீடம் என்பர். ‘மெய் பீடம்’ (60) பட்டர். உமையம்மையின் திருமேனியாக கருதி வழிபடும் ‘பீடம்’ ‘மெய்’ உடல் – [மெய் பீடம்] என்கிறார். இந்த வடிவத்தையே அபிராமிபட்டர், “பஞ்ச பாண பயிரவியே’’ என்கிறார்.

பாணம் என்ற சொல் உடலைக் குறிக்கும். பஞ்சபாணம் என்பது கருங்கல் திருஉருவம், சக்கரம் போன்ற யந்திரம், மானிடர்களின் உண்மை உருவம், கொலைக் கருவி மற்றும் பலியிடப்படும் இடம். இந்த ஐந்தையும் பஞ்சபாணம் என்றும். இதில் எழுந்தருளச் செய்யப் பட்டுள்ள உமையம்மையின் பெயரான பைரவியையும் இணைத்தே “பஞ்ச பாண பைரவியே’’ என்கிறார்.

The post சக்தி தத்துவம்: ‘‘பஞ்ச பாண பைரவியே’’ appeared first on Dinakaran.

Tags : Shakti Tattva ,Dr. ,Kungum Anmigam ,B. Rajasekhara ,Sivacharya ,Abhirami Anthadi ,Shakti Tattvam ,Lord Shiva ,Tiruppanandal ,Periyanaiaki Arunajateswarar ,Perumarku ,
× RELATED சிறுநீரக புற்றுநோய்… வருமுன் காப்போம்!