×

திருவாரூரில் ரூ.13 கோடி மதிப்பில் மார்க்கெட் வளாகம்: விரைவில் கட்டுமான பணி தொடங்குகிறது

திருவாரூர்: திருவாரூரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் காய்கறி மற்றும் பழங்கள் வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டம் கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி மூலம் உருவாக்கப்பட்டது. அதன்பின் தண்டலை ஊராட்சி விளமல் பகுதியில் 234 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு 2000ம் ஆண்டில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடமும் கட்டப்பட்டது. பின்னர் இந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டிடம், எஸ்.பி அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் என பல்வேறு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டன. பின்னர் 2006 முதல் 20111 வரையிலான ஆட்சி காலத்தின் போது மாணவ, மாணவிகள் நலன் கருதி 2009ம் ஆண்டில் திருவாரூர் அருகே நீலக்குடி என்ற இடத்தில் ஒன்றிய காங்கிரஸ் ஆட்சியின் ஒத்துழைப்புடன் ரூ. ஆயிரம் கோடி மதிப்பில் தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தையும் அமைத்து கொடுத்தார் கருணாநிதி. பின்னர் 2010ம் ஆண்டில் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் ரூ 100 கோடி மதிப்பில் அரசு மருத்துவ கல்லூரிக்கான கட்டிடத்தையும் கட்டினார். மேலும் அதே ஆண்டில் நகர மக்களின் அரை நூற்றாண்டு கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக திருவாரூர் நகராட்சி 30வது வார்டுக்குட்பட்ட தியாகபெருமாநல்லூர் பகுதியில் 18 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

மேலும் தேரோடும் 4 வீதிகளிலும் கான்கிரீட் சாலை மற்றும் பழுதுபட்டிருந்த ஆழித்தேரை புதுப்பிக்க ரூ.2 கோடி நிதியுதவி என பல்வேறு திட்டங்களை திருவாரூர் பகுதிக்கு மறைந்த முதல்வர் கருணாநிதி செய்து கொடுத்தார். அ அதன்பின்னர் 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எம்.எல்.ஏவாக கருணாநிதி வெற்றி பெற்ற போதிலும் ஆட்சி அமைக்க முடியாததால் தொகுதி மேம்பாட்டு நிதி மட்டுமின்றி கனிமொழி எம்.பி போன்றவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமும் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தார். 2011 முதல் 2021 வரையில் தொடர்ந்து 10 ஆண்டு அதிமுக தலைமையிலான ஆட்சியில் திருவாரூர் தொகுதியில் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாமல் முடக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் திருவாரூர் தொகுதியில் பூண்டிகலைவாணன் வெற்றி பெற்றார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் முயற்சியின் மூலம் இந்த திருவாரூர் தொகுதியில் பல்வேறு பணிகள் கடந்த 2 ஆண்டாக நடந்து வருகிறது. இதன்படி திருவாரூர் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சாலைகள், மழை நீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ. 5 கோடி மதிப்பிலும், ரூ.3 கோடி மதிப்பில் 3 குளங்கள் சீரமைக்கும் பணியும், நகரின் தெற்கு வீதியில் ரூ ஒரு கோடியே 97 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் ஒன்றும், ரூ 41 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் சோமசுந்தரம் பூங்கா புனரமைக்கும் பணிகள் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிக்காக இந்த கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.16 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே திட்டத்தின் கீழ் நகரில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் ரூ.13 கோடியே 27 லட்சம் மதிப்பில் புதிதாக காய்கறி மற்றும் பழ கடைகளுக்கான வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இதையடுத்து கட்டிட பணிகள் விரைவில் துவங்கவுள்ளதால் அங்குள்ள காய்கறி கடைகளை வியாபாரிகள் அகற்றி வருகின்றனர்.

The post திருவாரூரில் ரூ.13 கோடி மதிப்பில் மார்க்கெட் வளாகம்: விரைவில் கட்டுமான பணி தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Thiruvarur ,DMK ,Chief Minister ,Karunanidhi.… ,Dinakaran ,
× RELATED திருவாரூர் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!