×

பெண்களை வீடியோ எடுத்ததால் ஆயுதங்களுடன் இருதரப்பு மோதல்: வீடுகள், கடைகள் சூறை, கல் வீச்சு

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ஒரு கிராமத்தில் உள்ள குளத்திற்கு நேற்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சென்றனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்(24), பெண்களை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து எரியோடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், விஜயகுமாரின் செல்போனை பறிமுதல் செய்து பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மாலையில் விஜயகுமாரின் தரப்பை சேர்ந்தவர்கள், கத்தி, அரிவாளுடன் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பை சேர்ந்தவர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதனால் கிராமத்தில் பதற்றம் அதிகரித்தது. தகவலறிந்து வந்த எரியோடு போலீசார், கலவரத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கல் வீசி தாக்கியதில் சில போலீசாரும் காயமடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து மாவட்ட ஏடிஎஸ்பி சந்திரன், டிஎஸ்பிக்கள் உதயகுமார், துர்காதேவி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

The post பெண்களை வீடியோ எடுத்ததால் ஆயுதங்களுடன் இருதரப்பு மோதல்: வீடுகள், கடைகள் சூறை, கல் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Dindigul district ,Vijayakumar ,
× RELATED திறந்தவெளி கிணற்றில் ஆட்டோ பாய்ந்து டிரைவர், பயணி பலி: வடமதுரை அருகே சோகம்