×

மகரவிளக்கு பூஜை முடிந்த பிறகும் சபரிமலையில் குவியும் பக்தர்கள்: நாளை காலை நடை அடைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த 15ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் முடிந்த பின்னரும் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் வரை ஐயப்ப விக்கிரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்பட்டிருந்தது. மகரவிளக்கு பூஜை முடிந்த மறுநாள் முதல் சபரிமலை தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் தலைமையில் இரவில் படிபூஜை நடத்தப்பட்டு வருகிறது. மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நேற்று காலை 11 மணியுடன் நிறைவடைந்தது. இனி மாசி மாத பூஜைகளுக்கு அடுத்த மாதம் நடை திறந்த பின்னர் தான் நெய்யபிஷேகம் நடைபெறும்.

இன்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதன் பின்னர் பக்தர்கள் சபரிமலையில் தங்க அனுமதி இல்லை. நாளை காலை 6 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்று பந்தளம் மன்னர் பிரதிநிதிக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. நேற்றும் சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து இருந்தனர்.

The post மகரவிளக்கு பூஜை முடிந்த பிறகும் சபரிமலையில் குவியும் பக்தர்கள்: நாளை காலை நடை அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Makaravilakku ,Thiruvananthapuram ,Sabarimalai Ayyappan temple ,Ayyappan temple ,Makarvilakku ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...