×

நெல்லை பேட்டையில் இன்று ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

பேட்டை: நெல்லை பேட்டையில் 37 ஆண்டுகளுக்கு பின்னர் ஆக்கிரமிப்புகள் இன்று இடித்து அகற்றப்பட்டன. சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடை முகப்புகள், சன்செட், படிக்கட்டுகள் உள்ளிட்டவை ஜேசிபி மூலம் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் இன்று இடித்து அகற்றப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது. நெல்லை அருகே பேட்டை சேரன்மகாதேவி நெடுஞ்சாலையில் கடந்த 37 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படாததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்ததுடன், பொதுமக்களும் அல்லல்பட்டு வந்தனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சுபம் தாக்ரே ஞானதேவ் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் ஏற்கனவே பலமுறை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அறிவுறுத்தி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று (வெள்ளி) காலை பேட்டை செக்கடி துவங்கி பேட்டை, சேரன்மகாதேவி சாலை, நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மாநகராட்சி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. முறையாக அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நில அளவை துறை மூலம் அளவீடு செய்யப்பட்டு மாநகராட்சி உதவி ஆணையாளர் லெனின் தலைமையில் ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அவை முற்றிலுமாக அகற்றப்பட்டன. பேட்டை பகுதியில் சுமார் 300 கடைகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடை முகப்புகள், படிக்கட்டுகள், சன்செட்டுகள் ஆகியவை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றப்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் மூலம் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளில் மின் இணைப்புகளை மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக துண்டிப்பு செய்தனர். இதனை அடுத்து அக்கடைகளும் அகற்றப்பட்டன. இதுபோல் சாலையோர பெட்டிகடைகளும் உடனடியாக கூண்டோடு அகற்றப்பட்டன.ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜேந்திரன் ஆய்வாளர் பேச்சிநாதன் மற்றும் சாலை பணியாளர்கள், நில அளவைத் துறை சர்வேயர் முருகன்., பேட்டை மின்வாரிய இளநிலை பொறியாளர் அஜய் விக்னேஷ்,ஆக்க முகுவர் ஜெயக்குமார், சிறப்பு நிலை முகவர் முருகபெருமாள், வயர்மேன்கள் நாராயணன், மின்பாதை ஆய்வாளர்கள் சரவணன், கருவேல ராஜா, மணி,மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். பேட்டை இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

பொதுமக்கள் வரவேற்பு
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் மாநகராட்சி தற்போது எடுத்துள்ள நடவடிக்கை பொதுமக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதுடன் சாலை போக்கு வரத்தையும் எளிதாக்கி இருப்பது பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர் ஆக்கிரமிப்புகள் நடைபெறா வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என அவர்கள் தெரிவித்தனர்.

The post நெல்லை பேட்டையில் இன்று ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Nellai Pettai ,Pettah ,Nella Pettah ,JCP ,Nellai ,Pettai ,Dinakaran ,
× RELATED தா.பேட்டை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை