×

இஸ்லாமிய வாழ்வியல்: ஈகை

இஸ்லாமிய வாழ்வியல்

இல்லை என்று வருபவர்க்கு இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்குபவராக வள்ளல் நபி (ஸல்) இருந்தார். ஒரு முறை அரசுக் கருவூலத்திற்கு நிறைய ஆடுகள் வந்தன. மிகப்பெரும் ஆட்டுமந்தை…! அப்போது அரபுக் குலத் தலைவர் ஒருவர் நபிகளாரிடம் உதவி கோரி வந்தார். நபிகளார் அந்த ஆட்டு மந்தையைச் சுட்டிக் காட்டி, “அந்த ஆடுகள் அனைத்தும் உங்களுக்குத்தான். ஓட்டிச் செல்லுங்கள்” என்றார். உதவி கேட்டவருக்குத் தம் காதுகளையே நம்ப முடியவில்லை. “இறைத்தூதர் அவர்களே, உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?

இவ்வளவு ஆடுகளும் எனக்கேவா?” என்று கேட்க, “ஆம் உங்களுக்குத்தான், எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் நபிகளார். அந்த அரபுக் குலத் தலைவர் தம் குலத்தினரிடம் மகிழ்ச்சி பொங்க ஓடி வந்து, “இறைவனின் தூதர் மக்களின் வறுமையை அடியோடு போக்கும் அளவுக்கு வாரி வழங்குபவராய் இருக்கிறார்” என்று உணர்ச்சி பொங்க அறிவித்தார்.

இஸ்லாத்தின் மறுபெயர் ஈகைதான் என்றாலும், மிகையன்று. உலக மதங்களிலேயே பிறருக்குக் கொடுத்து மகிழ்வதற்கென்றே ஒரு பண்டிகையை ‘ஈகைத் திருநாள்’ என்னும் பெயரில் கொண்டாடும் ஒரே மார்க்கம் இஸ்லாமியத் திருநெறி மட்டும்தான்.

உஸ்மான் என்பவர் நபிகளாரின் அணுக்கத் தோழர். பெரும் வணிகர். இன்றைய டாடா பிர்லாக்களையும் பில்கேட்சுகளையும் மிஞ்சக்கூடிய அளவில் அன்றே பன்னாட்டு அளவில் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தவர். ஒருமுறை மதீனாவில் கடும் பஞ்சம் நிலவியது.

மக்கள் உண்ண உணவின்றி பெரிதும் சிரமப்பட்டார்கள். வெளியூர்களிலிருந்து யாரேனும் வணிகர்கள் உணவு தானியங்களை விற்பதற்காகக் கொண்டுவந்தால் நல்ல விலைக்கு வாங்கி விற்கலாமே என்று உள்ளூர் வியாபாரிகள் வணிகக் கூட்டத்தின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. சுமார் 700 ஒட்டகங்களில் உணவு தானியங்களும் இதர பொருட்களுமாய் உஸ்மான் வந்துகொண்டிருக்கிறார் என்று செய்தி வந்தது.

நகரமே விழித்துக்கொண்டது. மக்கள் பரபரப்பானார்கள். உள்ளூர் வணிகர்கள் திரண்டனர். உஸ்மான் வந்ததும் வணிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். “ஒன்றுக்கு இரண்டாக விலை தருகிறோம், எங்களுக்கே எல்லா தானியங்களையும் தாருங்கள்” என்றனர். உஸ்மான், “இந்த விலை கட்டுப்படியாகாது”

என்றார். உடனே வணிகர்கள், “சரி, மூன்று மடங்கு தருகிறோம்” என்றனர். உஸ்மான், “போதாது” என்றார். நான்கு மடங்கு, ஐந்து மடங்கு என்று வணிகர்கள் விலையை ஏற்றிக் கொண்டே செல்ல உஸ்மான் “போதாது” என்று மறுத்துக் கொண்டே வந்தார்.

ஒரு கட்டத்தில் எல்லா வணிகர்களும் அமைதியாகிவிட்டனர். ஏனெனில் ஐந்து மடங்கிற்கும்மேல் விலை வைத்து வாங்கும் அளவுக்குப் பெரிய வணிகர்கள் அங்கு யாரும் இல்லை. ஆகவே அவர்கள் உஸ்மானிடம், “நாங்கள்தான் இந்த ஊரின் பெரிய வியாபாரிகள். எங்களை விடவும் அதிக லாபம் தரக்கூடியவர் யாரேனும் இருக்கிறாரா?” என்று கேட்டனர்.

“ஆம். இறைவழியில் ஒரு பொருளை நீங்கள் தானம்செய்தால் பத்து மடங்கு நன்மை தருவதாக இறைவன் வாக்களித்துள்ளான். அதுதான் மிகப் பெரிய லாபம். ஆகவே இந்தப் பொருளை எல்லாம் நான் இறைவழியில் தானம் செய்கிறேன்” என்று கூறிய உஸ்மான், எழுநூறு ஒட்டகங்களின் மீதிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்களையும் இதர பொருட்களையும் பஞ்சத்தால் வாடிய மக்களுக்கே தானமாக வழங்கினார்.

– சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“இறைவனுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவு செய்பவர்களுக்குரிய நன்மைகளை இறைவன் பன்மடங்காக்குகிறான். அவன் அதிகமதிகம் வழங்குபவனும் யாவற்றையும் நன்கு அறிந்தவனும் ஆவான்.” (குர்ஆன் 2:261)

The post இஸ்லாமிய வாழ்வியல்: ஈகை appeared first on Dinakaran.

Tags : Prophet ,Walal ,Egai ,
× RELATED அண்ணல் நபிகளின் வழியில் வாழ்ந்து...