×

பேரம்பாக்கத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு பார்வேட்டை திருவிழா கோலாகலம்

திருவள்ளூர், ஜன. 19: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று உழவர் திருநாளை முன்னிட்டு பார்வேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். கிராம மக்களிடையே நல்லுறவையும், ஒற்றுமையும் ஏற்படுத்தும் விதமாக இந்த பார்வேட்டை திருவிழா ஆண்டுதோறும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு பேரம்பாக்கத்தில் பார்வேட்டை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த திருவிழாவிற்கு திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆர்டிஇ.ஆதிசேஷன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் களாம்பாக்கம் எம்.பன்னீர் முன்னிலை வகித்தார். இந்த திருவிழாவில் பேரம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள தீவு திடலில் பேரம்பாக்கம் கிராமத்தில் இருந்து காமாட்சியம்மன் சமேத சோளீஸ்வரர், பாலமுருகர், களாம்பாக்கம் மரகதவல்லி சமேத திருநாகேஸ்வரர், நரசிங்கபுரம் வள்ளி தெய்வானை சமேத முருகர், மாரிமங்கலம் சிவமாரி நாராயணி அம்மன், சிவபுரம் குறுந்த விநாயகர் உட்பட 5 கிராமங்களில் இருந்து சுவாமி சிலைகள் வண்ண, வண்ண மலர்களால் அலங்கரித்து டிராக்டரில் கொண்டு வந்து அனைத்து சுவாமிகளும் ஒரே வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுவாமிகளின் வாகனங்கள் முன்னும் பின்னும் அசைந்தாடி பார்வேட்டை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஒவ்வொரு சாமிக்கும் கற்பூர தீப ஆராதனை காண்பித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைத்து சுவாமிகளும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்து பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடி பொதுமக்களுக்கு தரிசனம் செய்வதற்காக காட்சியளித்தனர். இந்த பார்வேட்டை திருவிழாவில் கவுன்சிலர் குலாபி, சிவபுரம் தாமோதரன், நரசிங்கபுரம் மோகன், கருணாநிதி, பேரம்பாக்கம் எல்ஐசி பாபு, தனசேகர், தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் துரை, முன்னாள் கவுன்சிலர் அன்பு, ஏகாம்பரம், மாணிக்கம், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் ஆர்டிஇ சந்திரசேகர், ஆர்.சேகர், ரமேஷ், பிரவீன்குமார், ஆசிரியர் சேகர், பிஜேபி சிவக்குமார் மற்றும் பேரம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். இந்த திருவிழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் எஸ்பி சிபாஷ் கல்யாண் உத்தரவின் பேரில் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post பேரம்பாக்கத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு பார்வேட்டை திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Parvetta festival ,Perambakkam ,Tiruvallur ,Perambakkam, ,Tiruvallur District ,Kadambathur ,Union ,Pongal ,Uzhavar Thirunala ,parvetta ,
× RELATED கஞ்சா போதையில் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது