×

ஈரான் மீது பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்: 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி; பாதுகாப்பு நடவடிக்கை என விளக்கம்

இஸ்லாமாபாத்: ஈரான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாகிப் பகுதியில் ஜெய்ஷ் அல் அடல் போராளி குழுக்களின் தளங்கள் மீது கடந்த செவ்வாய்கிழமை(ஜன.17) இரவு ஈரான் ஆளில்லா விமானம், ஏவுகணைகள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை குறி வைத்து, தற்காப்பு நடவடிக்கையாக தாக்குதல் நடத்தினோம் என ஈரான் விளக்கம் அளித்தது.

ஆனால் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இஸ்லாமாபாத்திலிருந்து ஈரான் தூதரை வௌியேற்றியதுடன், ஈரானிலுள்ள பாகிஸ்தான் தூதரை திரும்ப பெற்றது. இந்த தாக்குதலுக்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஈரானின் சப்பார், தென்மேற்கு ஈரானில் சிஸ்தான், பலுசிஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று அதிகாலை அதிரடி தாக்குதலை நடத்தின. டிரோன்கள், ராக்கெட்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது இதில் அப்பகுதியில் இருந்த வீடுகள் சில இடிந்தன.

மேலும் 4 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகினர். “ஈரான் குடிமக்கள், ராணுவ வீரர்கள் யாரும் குறி வைக்கப்படவில்லை. அங்கு செயல்படும் தீவிரவாத குழுக்களை குறி வைத்தே தாக்குதல் நடத்தினோம். இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை” என பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போரால் வடகிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் – ஈரான் மோதல்கள் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

The post ஈரான் மீது பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்: 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி; பாதுகாப்பு நடவடிக்கை என விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,Iran ,Jaish Al Atal ,Kuhi Saqib ,Balochistan ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா