×

ஜெயலலிதா மறைவு, கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்து 8 ஆண்டுக்கு பின் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார் சசிகலா: வழக்குகள் சூடு பிடித்து உள்ள நிலையில் திடீர் பயணத்தால் பரபரப்பு

கோத்தகிரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 8 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சசிகலா கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை இந்த கொடநாடு எஸ்டேட், விடுமுறை கால தலைமை செயலகமாகவும் இருந்து வந்தது. பெரும்பாலான நாட்கள் கொடநாடு எஸ்டேட்டில் இருந்து அவர் அரசு பணிகளை கவனித்து வந்தார். ஆட்சியில் இல்லாத போதும் பெரும்பாலான நாட்கள் அவர் இங்கு தங்கி ஓய்வு எடுத்து வந்தார். ஜெயலலிதா ஒவ்வொரு முறை கொடநாடு எஸ்டேட்டுக்கு வரும்போதும் அவருடன் கட்டாயமாக அவரது தோழி சசிகலா உடன் வருவார். அவர்கள் இருவரும் இங்கு தேயிலை எஸ்டேட்டினை சுற்றி பார்ப்பது, அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வது, தொழிற்சாலையை சுற்றிப் பார்ப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதன்பின் அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைத்து முதல்வராக சசிகலா நினைத்தார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஜெயலலிதா மரணமடைந்ததால் தண்டனை அறிவிக்கப்படவில்லை. இதனால், சசிகலா 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில், 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொடநாடு எஸ்டேட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் காவலாளி ஓம்பகதூரை கொன்று உள்ளே சென்று ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது. கொள்ளை நடந்தபோது மின்சாரம் ஒட்டுமொத்தமாக துண்டிக்கப்பட்டு இருந்தது.

கொடநாடு எஸ்டேட் முன்னாள் அமைச்சர்களின் சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. அதிகாரத்தில் உள்ளவர்களின் தயவு இல்லாமல் இந்த கொலை, கொள்ளை நடந்து இருக்காது என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அதிமுக தொண்டர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த சயான் தனது மனைவி மற்றும் மகளுடன் வாளையாறு அருகே சென்றபோது கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சயானின் மனைவி, மகள் பலியாகினர். சயானின் உயிர் தப்பி
னார். சேலம் அருகே நடந்த விபத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார்.

கொடநாட எஸ்டேட்டின் கம்ப்யூட்டர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டனர். ஜெயலலிதா மற்றும் எஸ்டேட் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கொலை, விபத்தில் பலி, தற்கொலை என சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து எடப்படி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் விபத்தில் ஜெயலலிதா டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், எடப்பாடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சூழலில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி வரும் ஜன.30, 31ம் தேதிகளில் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் இருந்து கடந்த 2021 ஜனவரி 27ம் தேதி விடுதலையான சசிகலா அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் தோல்வி முடிந்தது. இருப்பினும், பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்று ஆதரவு திரட்டினார். அதிமுகவை நிச்சயம் இணைப்பேன் என்று கூறி வருகிறார். இந்த சூழலில், ஜெயலலிதா மறைவு, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்து 8 ஆண்டுகளுக்கு பின்பு முதன்முறையாக சசிகலா நேற்று கொடநாடு எஸ்டேட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு எஸ்டேட் நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

* விரைவில் அதிமுக ஒன்று சேரும்: கண்ணீர் மல்க சசிகலா பேட்டி
கொடநாட்டில் சசிகலா கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறுகையில், ‘கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளர்களை பார்க்க வந்துள்ளேன். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உயிரிழந்த காவலாளி ஓம் பகதூர், சிறு வயது முதலே எஸ்டேட்டில் பணியாற்றி வந்தார். கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சயமாக ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையை பெற்று தருவார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்கு பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது சிலை அமைக்கப்பட்டு திறக்கப்படும். பிளவுபட்ட அதிமுக ஒன்றுபட தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். அந்த நடவடிக்கை விரைவில் வெற்றி அடையும். அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு தர வேண்டும். அதுதான் அரசியலில் முக்கியமானது’ என்றார்.

The post ஜெயலலிதா மறைவு, கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்து 8 ஆண்டுக்கு பின் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார் சசிகலா: வழக்குகள் சூடு பிடித்து உள்ள நிலையில் திடீர் பயணத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sasikala ,Koda Nadu ,Jayalalitha ,Kothagiri ,Chief Minister ,Jayalalithaa ,Kodanadu ,Kotagiri ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…