×

ஒட்டகத்தில் ஊர்வலம் சென்ற மணமகன் உள்பட 25 பேர் மீது வழக்கு


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் மணமகள் வீட்டிற்கு ஒட்டகத்தில் சென்ற மணமகன் மற்றும் அவரது நண்பர்கள் 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் வாரம் என்ற இடத்திற்கு அருகே உள்ள சதுரக்கிணறு என்ற பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ரிஸ்வான் (27). அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. அப்போது திருமணத்தில் புதுமையை ஏற்படுத்த வேண்டும் என்று கருதி மணமகன் ரிஸ்வானை அவரது நண்பர்கள் ஒட்டகத்தில் ஏற்றி மணமகளின் வீட்டுக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியில் பட்டாசுகளையும் வெடித்தனர். சாலையை அடைத்தபடி அவர்கள் சென்றதால் கண்ணூர்-மட்டனூர் சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இது கண்ணூர் விமான நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலை ஆகும். இதனால் பயணிகள், மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் உள்பட பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து சக்கரக்கல் போலீசுக்குத் தகவல் தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று மணமகன் ரிஸ்வானை ஒட்டகத்திலிருந்து கீழே இறக்கினர். இதன்பின் போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர். இது தொடர்பாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதாக கூறி மணமகன் ரிஸ்வான் மற்றும் அவரது நண்பர்கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

The post ஒட்டகத்தில் ஊர்வலம் சென்ற மணமகன் உள்பட 25 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kannur, Kerala ,Kannur, Kerala State ,
× RELATED கண்ணூர் அருகே குண்டு வெடித்து மார்க்சிஸ்ட் தொண்டர் பலி: 3 பேர் படுகாயம்