×

சிதம்பரம் அருகே பயங்கரம்: தலை துண்டித்து ஆசிரியர் படுகொலை


சிதம்பரம்: சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் திருவக்குளம் சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் வேலு, இவரது மகன் அருண்பாண்டியன் (28). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு காணும் பொங்கலை முன்னிட்டு அருண்பாண்டியன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த துரை மகன் செந்தில் (43) மற்றும் சிலர் திடல் வெளியில் குழுவாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அருண் பாண்டியனை கத்தியால் வெட்ட முயற்சித்துள்ளார்.

இதனை செந்தில் தடுத்துள்ளார். அப்போது செந்திலுக்கு கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த மர்ம நபர் அருண்பாண்டியனை கழுத்தில் வெட்டி உள்ளார். இதில் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அருண்பாண்டியன் துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த அருண்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கையில் வெட்டுப்பட்ட செந்தில் சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அருண்பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிலருக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்து வந்ததாகவும், அது சம்பந்தமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிதம்பரத்தில் உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சிதம்பரம் அருகே பயங்கரம்: தலை துண்டித்து ஆசிரியர் படுகொலை appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Annamalai town ,Cuddalore district ,Annamalai Nagar ,Tiruvakulam ,Sivan ,Dinakaran ,
× RELATED பாஜவோடு மறைமுக கூட்டணி நாடாளுமன்ற...