×

இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சேலத்தில் ஜன.21ல் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாடு புது வரலாறு படைக்கட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடல் இல்லா சேலம் மாவட்டம், கருப்பு – சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இளைஞரணி மாநாடு! படைக்கட்டும் இந்தியாவின் புது வரலாறு! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

‘எல்லாருக்கும் எல்லாம்’ என்கிற இலட்சியத்தைக் கொண்டுள்ள நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு இவற்றுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. பொங்கல் நன்னாளில் ஏழை -எளியோர் புத்தாடை உடுத்திட ஏதுவாகவும், நெசவாளர்களின் வாட்டம் போக்கிடும் செயலாகவும் வேட்டி – சேலைகள் பல ஆண்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அவற்றைத் தாமதப்படுத்தாமல் பொங்கல் நேரத்திலேயே வழங்கியது திராவிட மாடல் அரசு. தரமாகவும் அழகாகவும் வேட்டி – சேலைகள் இருப்பதைப் பொங்கல் நாளில் அதனை உடுத்தியிருந்தது தொடர்பான பதிவுகளைச் சமூக வலைத்தளத்தில் கண்டேன்; நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்கிற்று! அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடும் திருநாள்தான் பொங்கல் விழா.

அதனைத் தமிழர் திருநாள் என்று இன உணர்வும் மொழி உணர்வும் கொண்ட பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்திற்குரியது. எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி, தமிழர்கள் அனைவரும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறள் நெறியைப் பின்பற்றி வாழ்கின்ற தமிழ் நிலத்தின் உயர்ந்த பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையிலும், மத வெறியை – சாதிய வன்மத்தை – மொழி ஆதிக்கத்தை இங்கே விதைக்க நினைப்போருக்கு ஒருபோதும் இந்த மண்ணில் இடமில்லை என்பதைக் காட்டும் வகையிலும் சமூகநீதி இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ‘சமத்துவப் பொங்கல்’ விழாவைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுமாறு உங்களில் ஒருவனான நான் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

உங்களுக்கு அன்புக் கட்டளையிடும்போது, அதனை முதலில் செயல்படுத்தக் கூடியவனாக நான் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நான் மறப்பதில்லை. அதனால், எனது கொளத்தூர் தொகுதியில் சமத்துவப் பொங்கல் விழாவைப் பல்வேறு மதத்தினர், பல மொழியினர் சூழக் கொண்டாடி மகிழ்ந்தேன். அதுபோலவே, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நம்முடைய கழக நிர்வாகிகள் சமத்துவப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிய செய்திகள் தொடர்ந்து வந்தபோது சர்க்கரைப் பொங்கலாக இதயம் இனித்தது. தலைநகரான சென்னை மாநகரம் தொடங்கி, ஊராட்சிகள் வரை சமத்துவப் பொங்கலின் மணம் வீசியது. இதுதான் திராவிட மாடல் தமிழ்நாடு. இதுவே, இந்திய ஒன்றியம் முழுமைக்கும் தேவைப்படுகிறது.

அதனை அரசியல் களத்தில் எடுத்துரைக்கும் வகையில், சேலம் மாநகரில் ஜனவரி 21-ஆம் நாள் மிகுந்த எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. கழகத் தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதானே! 1980-ஆம் ஆண்டில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் இளைஞரணியைத் தொடங்கி வைத்து, அதனை என் கைகளில் ஒப்படைத்தார். 1982-ஆம் ஆண்டு முதல் இளைஞரணிச் செயலாளராகப் பணியாற்றத் தொடங்கி, 30 ஆண்டுகளுக்கு மேல் அதனை வழிநடத்தி, தலைவர் கலைஞரின் நம்பிக்கையைப் பெற்றேன்.

2007-ஆம் ஆண்டு நெல்லை மாநகரில் இளைஞரணியின் முதல் மாநில மாநாடு, வெள்ளி விழா மாநாடாகச் சிறப்பாக நடைபெற்று, அடுத்த தலைமுறையினரைக் கழகத்தின் பக்கம் ஈர்த்தது. கழகத் தலைமையின் சுமையைப் பங்கிட்டுக் கொள்ளும் அணியாக இளைஞரணி எப்போதும் முன்னிற்பது வழக்கம். இப்போதும் அந்த வழிமுறைப்படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், ஜனநாயகப் போர்க்களத்திற்குக் கழக வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சிப் பாசறையாக அமையவிருக்கிறது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு.

பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழகத்தையும் தமிழ்நாட்டையும் தலைமையேற்று வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1970-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கழக மாநில மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார். அதில் ஐந்தாவது முழக்கம், ‘மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’ என்பதாகும். பன்முகக்தன்மை கொண்ட இந்திய ஒன்றியம் வலிமையாக இருக்க வேண்டுமென்றால், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே மாநில சுயாட்சிக் கொள்கையின் நோக்கம். அது நிறைவேற்றப்பட்டால்தான், உண்மையான கூட்டாட்சிக் கருத்தியலின்படி இந்திய ஒன்றியம் வலிமையுடன் செயல்பட முடியும். பத்தாண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன.

கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும். ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது.

ஆன்மீக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி – சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாகப் பாதித்த மிக்ஜாம் புயல் – மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை – வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21-இல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாண்புமிகு இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி முன்னெடுத்து வருகிறார்.

இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்குத் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதைக் காண்கிறேன். அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள கழக முதன்மைச் செயலாளர் – மாநாடுகளைச் சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான மாண்புமிகு கே.என்.நேரு அவர்களும், சேலம் மாவட்டக் கழக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு – பகலாக மேற்கொண்டு வருகிறார்கள். இளைஞரணி மாநில மாநாட்டின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு தழுவிய அளவில் இருசக்கர வாகனப் பேரணியை கண்கவரும் வகையில் நடத்திக் காட்டிய இளைஞரணி நிர்வாகிகள், இன்று (ஜனவரி 18) காலையில் சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து சுடரேந்தித் தொடர் ஓட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி தொடங்கி வைத்த இந்தச் சுடரோட்டம் சேலம் வரை தொடர்கிறது.

இந்த நேரத்தில், நான் நினைத்துப் பார்க்கிறேன். காஞ்சிபுரத்தில் 1972-ஆம் ஆண்டு நடந்த மாநில சுயாட்சி மாநாட்டின்போது, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலிருந்து அண்ணா ஒளிச்சுடரை ஏந்தி – ஓடி, மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர், நாவலர், இனமானப் பேராசிரியர் ஆகியோரிடம் நான் வழங்கியது என் நினைவுக்கு வருகிறது. சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டிற்காக இளைஞரணியினர் ஏந்தியுள்ள ஒளிச்சுடர், காலம்தோறும் கொள்கை வெளிச்சம் பாய்ச்சிடும் அணியாக இளைஞரணித் திகழும் என்பதை மெய்ப்பிக்கிறது. மாநாட்டில் தலைமையுரை ஆற்றுகின்ற உங்களில் ஒருவனான நானும் மனதளவில் என்றும் என்னை இளைஞனாகவே கருதுகிறேன். நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன்.

தொடர்ச்சியான பணிகள் காரணமாக, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஒன்றிரண்டு கடிதங்களே என்னால் எழுத முடிந்தது. எனினும், இளைஞரணியின் 25-ஆம் ஆண்டினையொட்டி 2007-ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய 25 கடிதங்களை முரசொலியின் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது கழகம். மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருகிறது.

ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்தப் பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாகக் கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு – சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும் என்று கூறியுள்ளார்.

 

The post இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : India ,CM K. Stalin ,CHENNAI ,DIMUKA ,SALEM ,MINISTER ,MLA ,K. Stalin ,Salem District ,Black — Red Sea ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...