×

கொடைக்கானலில் உறைபனி சீசன் துவக்கம் : பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் உறைபனி சீசன் துவங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த‌ ஆண்டு உறைபனி சீசன் தாமதமாக துவங்கியுள்ளது. இந்த ஆண்டு பருவமழை அதிகளவு பெய்ததால் நட்சத்திர ஏரி முழுமையாக நிரம்பியுள்ளது.

தற்போது பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. நகரில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கீழ்பூமி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு பகுதிகளில் உறைபனி கொட்ட துவங்கி உள்ளது. இதனால் ஏரி, பிரையண்ட், கீழ் பூமி பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளின் பல இடங்களில் வெண்ணிற கம்பளம் விரித்ததை போல் காட்சியளிக்கிறது.

உறை பனியால் ஏரியில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வெயில் வந்த பிறகே நடைபயிற்சியை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர். மேலும் ஏரிப்பகுதி சிறு வியாபாரிகள் கடைகளை தாம‌த‌மாக‌வே திறந்து வ‌ருகின்ற‌ன‌ர். அதேநேரம் ப‌னிப்போர்வை போர்த்திய கொடைக்கானலை சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் கண்டு ர‌சித்து வ‌ருகின்ற‌ன‌ர்.

கொடைக்கானலில் தற்போது நிலவி வரும் இந்த கடும் குளிர் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகள் காலையில் தாமதமாக தங்களது பணிகளை துவக்கி வருகின்றனர். மாலை நேரத்தில் விரைவாக தங்களது பணிகளை முடித்து விடுகின்றனர். இந்த கடும்பனியால் வயதானவர்கள் மற்றும் சளி தொந்தரவு உள்ளவர்கள் வெளியூர்களுக்கு சென்று விடுகின்றனர்.

பகல் பொழுதில் கம்பளி ஆடைகள், ஜெர்கின், ஸ்வெட்டர், மப்ளர், கையுறைகள் பொதுமக்கள் அணிகின்றனர். இரவு நேரங்களில் வீடுகளில் ஹீட்டர் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்தியும், இரவில் படுக்கையில் கம்பளிகளை கூடுதலாக பயன்படுத்துகின்றனர். மேலும் கடுமையான குளிரால் பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post கொடைக்கானலில் உறைபனி சீசன் துவக்கம் : பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Princess of the Hills' ,Dindigul district ,Dinakaran ,
× RELATED கோடை கொண்டாட்டத்துக்கு பிரையண்ட்...