×

விதிமீறி இயங்கிய 148 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ₹8.83 லட்சம் அபராதம் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை வேலூர் போக்குவரத்து சரகத்தில் 8 நாட்களாக நடத்திய சோதனையில்

வேலூர், ஜன.18: வேலூர் சரகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 8 நாட்களான நடத்திய சிறப்பு சோதனையில் விதிமீறி இயங்கிய 148 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ₹8.83 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசு சார்பில் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படுவது வழக்கம். இதேபோல் கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு போக்குவரத்து கழக கமிஷனர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், கடந்த 10ம் தேதி முதல் வரும் 18ம் தேதி வரை சிறப்பு குழுக்கள் அமைத்து, டோல்கேட்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, வேலூர் சரகத்திற்கு உட்பட்ட ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன் மேற்பார்வையில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 10ம் தேதி இரவு முதல் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் பிற மாநில வாகனங்கள் சாலை வரி செலுத்தாமல் இயக்குவது உள்பட பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வேலூர் சரகத்தில் கடந்த 10ம் தேதி இரவு முதல் நேற்று காலை 1,188 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இதில் 169 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ₹8.83 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ₹8.24 லட்சம் வசூலிக்கப்பட்டது. வீதி மீறி இயக்கப்படும் ஆம்னி பஸ்களும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சோதனை இன்றுடன் நிறைவு பெற உள்ளதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post விதிமீறி இயங்கிய 148 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ₹8.83 லட்சம் அபராதம் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை வேலூர் போக்குவரத்து சரகத்தில் 8 நாட்களாக நடத்திய சோதனையில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Pongal festival ,Diwali ,Tamil Nadu ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...