×

நாகலாந்தில் ராகுல் குற்றச்சாட்டு கலாச்சாரம், மதங்கள் மீது ஆர்எஸ்எஸ், பாஜ தாக்குதல்: உணவு பழக்கவழக்கங்களை அவமதிக்கிறது

கோஹிமா: ‘நாட்டின் கலாச்சாரங்கள், மதங்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆர்எஸ்எஸ், பாஜ, பல்வேறு பாரம்பரியம், உணவு, மத பழக்கவழக்கங்களை அவமதிக்கின்றன’ என நாகலாந்தில் நீதி நடைபயணத்தில் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை மணிப்பூரில் தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்கிருந்து நாகலாந்து மாநிலத்தில் கடந்த 2 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். மோகோக்சுங் நகரில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:

நாகலாந்து அரசியல் பிரச்னை குறித்து கடந்த 2015ல் ஒப்பந்தம் செய்த பின் 9 ஆண்டுகளாகியும் பிரச்னையை தீர்க்க பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை. இப்பிரச்னையின் தீவிரத்தை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது. இந்தியர்களாக, ஒவ்வொருவரும் மற்றவர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், உணவு மற்றும் மத பழக்கவழக்கங்களை மதிக்க வேண்டும், ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ அவைகள் மீது தாக்குதல் நடத்தி அவமரியாதை செய்கின்றன. மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து பல மாதங்களாகியும் பிரதமர் அங்கு செல்லவில்லை. இதனால் ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன்.

மணிப்பூர், நாகலாந்து மற்றும் பிற வடகிழக்கு மாநில மக்களின் பிரச்னைகள் மீது முழு நாட்டின் கவனத்தையும் ஏற்படுத்துவதே இந்த நடைபயணத்தின் நோக்கம். இனி டெல்லியில் நாகா இனத்தவருக்கு ஒரு சிப்பாயாக நான் இருப்பேன். உங்களின் எந்த பிரச்னை குறித்தும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இவ்வாறு கூறினார். நாகலாந்தை தொடர்ந்து ராகுலின் நடைபயணம் இன்று அசாமில் நுழைகிறது.

* அசாம் முதல்வர் பயப்படுகிறார்

ராகுலின் யாத்திரைக்கு அசாம் மாநிலத்தில் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அங்கு இன்று யாத்திரை நுழைய உள்ள நிலையில் அனுமதி கிடைக்காதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அல்கா லம்பா கூறும்போது,’ இந்திய ஒற்றுமை நீதி யாத்திரைக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல்களை உருவாக்க வேண்டாம். எங்களுக்கு சரியான நேரத்தில் அனுமதி கிடைத்தால், சிறப்பாக தயார் படுத்திக்கொள்வோம். அனுமதி வழங்காவிட்டாலும் ராகுல் அசாம் வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா எங்கள் யாத்திரையைக் கண்டு பயப்பட வேண்டாம்’ என்றார்.

The post நாகலாந்தில் ராகுல் குற்றச்சாட்டு கலாச்சாரம், மதங்கள் மீது ஆர்எஸ்எஸ், பாஜ தாக்குதல்: உணவு பழக்கவழக்கங்களை அவமதிக்கிறது appeared first on Dinakaran.

Tags : Rahul ,RSS ,BJP ,Kohima ,Rahul Gandhi ,Justice Walk ,Nagaland ,Congress ,India Unity Justice Walk ,Manipur… ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...