×

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு; முதல்வர் பரிசீலனை: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், காலை உணவுத் திட்டத்தை பொறுத்தவரையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் பரிசீலிக்க முதலமைச்சர் திட்டமிட்டு வருகிறார்.

அதற்கான சாதகமான அறிவிப்பு நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் வரும். அரசு நினைத்தால் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் கொண்டு வரலாம். தைவான் நாட்டில் ஊக்கத்தொகையுடன் உயர்கல்வி படிக்க இந்தியாவில் 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், அதில் 2 பேர் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள். வரலாற்றிலேயே 600க்கு 600 என்ற ரிசல்ட் கொடுத்ததும் நாம் தான் என்றார். தமிழ்நாடு நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்கள் சங்க பொதுச் செயலாளர் தமிழ்மணி வரவேற்றார். தமிழ்நாடு அரசின் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக இந்திய அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு இடையேயான நவீனத் தொழிநுட்பத்திறன் சார்ந்த போட்டியில் கலந்துகொண்ட 9,150 மாணவர்களில் இந்திய அளவில் முதல் 10 பேரில் தேர்வு பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், தளி மாதிரி மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் சுஜன் சைத்தேஜ்க்கு அமைச்சர் பாராட்டுதெரிவித்தார். மதுரையில் அரசு பள்ளிக்கு நிலம் வழங்கிய பூரணம்மாள் கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு அமைச்சரும், வட்டாரக் கல்வி அலுவலர்களும் எழுந்து நின்று கை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.சங்க தலைவர் கஜேந்திரன் நன்றி கூறினார். பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் முத்துக்குமார் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 140க்கும் மேற்பட்ட நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு; முதல்வர் பரிசீலனை: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,Anbil Mahesh ,CHENNAI ,School Education Department ,Open University ,Saidapet, Chennai ,School Education Minister ,Anpil Mahesh Boiyamozhi ,Anbil Mahesh Poiyamozhi ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...