×

அதிமுக பேனரில் எம்ஜிஆருக்கு பதில் நடிகர் அரவிந்த்சாமி படம்: நெட்டிசன்கள் கிண்டல்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே எம்ஜிஆரின் 107வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனரில் அவரது படத்திற்கு பதிலாக அரவிந்த்சாமி படம் இடம்பெற்றுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மாதனூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்மிட்டாளம் ஊராட்சியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் விழா கொண்டாடத்தையொட்டி பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, கே.சி.வீரமணி உட்பட 35 பேரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த பேனரில் எம்ஜிஆரின் படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமி எம்ஜிஆர் வேடத்தில் நடித்த ஒரு படத்தின் போட்டோவை அதிமுகவினர் வைத்து உள்ளனர்.

இந்த பேனர் குறித்த படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. ‘கட்சி தலைவரின் படம் கூடவா உங்களுக்கு தெரியவில்லை’ என பலர் சமூக வலை தளங்களில் விமர்சித்தும், கிண்டலடித்தும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் வைரலான நிலையில், இதுபற்றி அறிந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். பேனர் தயாரித்த கட்சியினர் உள்ளிட்டோரிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். பின்னர், நேற்று முன்தினம் இரவோடு இரவாக அரவிந்த் சாமி படத்தின் மீது எம்ஜிஆர் படத்தை ஒட்டி வைத்து அதில் எம்ஜிஆர் என பதிவிட்டனர்.

தேனியில் அதிமுக கொடியை ஏற்றிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தால் அமைக்கப்பட்ட அதிமுக கொடிக்கம்பம் உள்ளது. எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த கொடி கம்பத்தில் நேற்று அதிமுக சார்பில் கொடி ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திடீரென அங்கிருந்த அதிமுக கொடியை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்றினர். இதனைக் கண்ட தேனி மாவட்ட அதிமுக செயலாளர் முறுக்கோடை ராமர் தலைமையில் நிர்வாகிகள் ஆத்திரமடைந்து, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக வெடித்தது. இதையடுத்து மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் மற்றும் நிர்வாகிகள் ஓபிஎஸ் தரப்பினர் ஏற்றியக் கொடியை அவிழ்த்து விட்டனர். இதனையடுத்து கொடிக்கம்பத்தை பிடித்து ஆட்டி, சேதப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர். பதற்றமான சூழல் அதிமானதை தொடர்ந்து, அங்கு கூடியிருந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ‘எடப்பாடி ஒழிக’ என்றும், அதிமுகவினர் ‘ஓபிஎஸ் ஒழிக’ என கோஷமிட்டபடியே சென்றனர்.

குமரியில் அதிமுக- அமமுக மோதல்

எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்ஜிஆர் மற்றும் அண்ணா சிலைகளை சுற்றி அதிமுகவினர் கொடிகளை கட்டி இருந்தனர். அங்கு அமமுக மாவட்ட செயலாளர் ராகவன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று மாலை அணிவித்து, அமமுக கொடியை எம்ஜிஆர் சிலை முன்பு கட்டி வைத்துவிட்டு சென்றனர். அங்கு வந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், கவுன்சிலர் லிஜா, முன்னாள் கவுன்சிலர் சகாயராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அமமுக கொடியை அகற்றியதால் இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு நிர்வாகிகளுடன் வந்த அதிமுக எம்எல்ஏ தளவாய்சுந்தரம், ‘எம்ஜிஆர் சிலை பொதுவானது. இதில் ஏன் தகராறு செய்யவேண்டும்’ என கேட்டார். இதனை தொடர்ந்து அதிமுகவினர் அங்கிருந்த தனது கட்சி கொடிகளை அகற்றி விட்டு சென்றனர். இதனை தொடர்ந்து அமமுகவினரும் அங்கிருந்து சென்றனர்.

The post அதிமுக பேனரில் எம்ஜிஆருக்கு பதில் நடிகர் அரவிந்த்சாமி படம்: நெட்டிசன்கள் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Aravindsamy ,MGR ,AIADMK ,Ampur ,Tirupattur District ,Ambur Madanur West Union ,ADMK ,
× RELATED கடலூரில் கோஷ்டி பூசல் காரணமாக ஒரே...