×

உடுமலை அருகே ஆல்கொண்டமால் கோவில் திருவிழா: கால்நடைகளின் உருவார பொம்மைகள் நேர்த்திக் கடன்


உடுமலை: உடுமலை அருகே ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கால்நடைகளின் உருவார பொம்மைகளை விவசாயிகள் நேர்த்திக்கடனாக செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி அருகேயுள்ள சோமவாரப்பட்டியில் மாலகோவில் என அழைக்கப்படும் ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் சமயத்தில் தமிழர் திருவிழா 3 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று துவங்கியது. அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பகல் 11 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 6 மணிக்கு உழவர் திருநாள் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இன்றும் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி நாளை மாலை 6 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், 7 மணிக்கு மகா தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி திருவீதி உலா, வாணவேடிக்கை நடைபெற உள்ளது. மாலகோவில் திருவிழாவை முன்னிட்டு, சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஏராள்மானோர் கோவிலில் குவிந்தனர். இதையொட்டி இன்று காலை கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக நேர்த்திக்கடனாக கால்நடைகளின் உருவார பொம்மைகளை விவசாயிகள் காணிக்கையாக செலுத்தினர். இதனால் கோவிலில் உள்ள நந்தி சிலை முன்பு உருவார பொம்மைகள் மலைபோல் குவிந்தன. மேலும் சில விவசாயிகள் ஆடு, மாடுகளை கோவிலுக்கு தானமாக வழங்கினர். விழாவையொட்டி குழந்தைகள் பொழுது போக்க ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் குழந்தைகள் ஏறி விளையாடி மகிழ்ந்தனர். இதையொட்டி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அமரநாதன், செயல்அலுவலர் ராமசாமி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post உடுமலை அருகே ஆல்கொண்டமால் கோவில் திருவிழா: கால்நடைகளின் உருவார பொம்மைகள் நேர்த்திக் கடன் appeared first on Dinakaran.

Tags : Alkondamal temple festival ,Udumalai ,Alkondamal temple ,Malakovil ,Somavarpatti ,Pethapambatti ,Tirupur district ,
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்