×

சமூக வலைதளங்களில் விமர்சிக்கும் அளவிற்கு பாடகி சித்ரா செய்த தவறு என்ன?.. மலையாள நடிகை ஆவேசம்


மும்பை: சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கும் அளவிற்கு பாடகி கே.எஸ்.சித்ரா செய்த தவறு என்ன? என்று மலையாள நடிகை கிருஷ்ண பிரபா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடக்கிறது. அந்த விழாவின் போது பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி ராம நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்று பாடகி கே.எஸ்.சித்ரா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இவரது அழைப்பை கொச்சைபடுத்தும் வகையில் கே.எஸ்.சித்ராவுக்கு எதிராக பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் கே.எஸ்.சித்ரா ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

கே.எஸ்.சித்ரா மீதான சமூக வலைதள தாக்குதல்களுக்கு எதிராகவும் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு மலையாள நடிகை கிருஷ்ண பிரபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘கே.எஸ்.சித்ரா செய்த தவறு என்ன? அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்து மதங்களையும் மதிக்கும் பாடகி. இந்த நாட்டில் தாங்கள் மதத்தை நம்புவதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும் ஒருவருக்கு உரிமை இல்லையா? அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டதற்காக அவரை மிகவும் மோசமாக விமர்சித்து வருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உள்ளது. கே.எஸ்.சித்ராவுக்கும் அந்த கருத்து சுதந்திரம் உள்ளது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வது நல்லது. ஏதோ பெரிய தவறு செய்தது போல, அவரை சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் கே.எஸ்.சித்ராவுக்கு ஆதரவாக நான் இருப்பேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

The post சமூக வலைதளங்களில் விமர்சிக்கும் அளவிற்கு பாடகி சித்ரா செய்த தவறு என்ன?.. மலையாள நடிகை ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Chitra ,Mumbai ,K.S.Chitra ,Krishna Prabha ,22nd Ram temple ,Ayodhya, Uttar Pradesh ,Avesam ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?