×

கர்நாடகா அரசு நிறுவனத்தின் பெயரில் போலி ‘மைசூர் சாண்டல்’ சோப்பு தயாரிப்பு: தெலங்கானாவில் செயல்பட்ட தொழிற்சாலையில் சோதனை


பெங்களூரு: கர்நாடகா அரசு நிறுவனத்தின் பெயரில் போலி ‘மைசூர் சாண்டல்’ சோப்பை தயாரித்து விற்பனை செய்த தெலங்கானா தொழிற்சாலையின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் இயங்கிவரும் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனமான மைசூர் சாண்டல் நிறுவனமானது, வாசனை மிகுந்த சோப்பை தயாரித்து சந்தைப் படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பெயரில் போலி சோப் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செயல்பட்டு வருவதாக கர்நாடக அரசு நிறுவனமான கே.எஸ்.டி.எல் நிறுவனத்தின் தலைவரும், தொழில்துறை அமைச்சருமான எம்.பி.பாட்டீலுக்கு தெரியவந்தது.

அதையடுத்து கே.எஸ்.டி.எல் நிர்வாக இயக்குனர் அளித்த புகாரின் அடிப்படையில், ஐதராபாத்தில் செயல்பட்டு வந்த போலி சோப்பு தொழிற்சாலையை அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரூ.2 கோடி மதிப்பிலான சந்தையில் விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்த சோப்பு பாக்கெட்டுகள் இருந்தன. தொழிற்சாலையின் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சோப்பு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொழிற்சாலையின் உரிமையாளர்கள் ராகேஷ் ஜெயின், மகாவீர் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘150 கிராம் எடையுள்ள 1,800 சோப்புகள் அடங்கிய 20 பெட்டிகள், 75 கிராம் எடையுள்ள 9,400 சோப்புகள் கொண்ட 47 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐதராபாத்தில் உள்ள பல்வேறு சந்தைகளில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி மைசூர் சாண்டல் சோப்புகள் கைப்பற்றப்பட்டன’ என்று தெரிவித்தனர்.

The post கர்நாடகா அரசு நிறுவனத்தின் பெயரில் போலி ‘மைசூர் சாண்டல்’ சோப்பு தயாரிப்பு: தெலங்கானாவில் செயல்பட்ட தொழிற்சாலையில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Mysore Sandal ,Karnataka Govt ,Telangana ,BENGALURU ,Karnataka government ,Mysore Sandal Company ,Karnataka ,Karnataka Government Company ,
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...