×

மதுரை அருகே உலக புகழ்பெற்ற தமிழர் பாரம்பரிய திருவிழா: அலங்காநல்லூரில் அனல்பறக்கும் ஜல்லிக்கட்டு


அலங்காநல்லூர்: மதுரை அருகே, அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இதில், 1200 காளைகளும், 700 வீரர்களும் களமிறங்கியுள்ளனர். தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடந்தது. 3ம் நாளான இன்று மதுரை அருகே அலங்காநல்லூரில் உள்ள கோட்டை முனியசாமி வாடிவாசலில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு தொடங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக நகரில் உள்ள விநாயகர், முனியாண்டி, அய்யனார், கருப்புசாமி, காளியம்மன், முத்தாலம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் பாரம்பரிய முறைப்படி, காளைகளுக்கு வேட்டி, துண்டு, பரிசு பொருட்களை தலைச்சுமையாக வாண வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

போட்டியில் பங்குபெற 1,200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடங்கும் முன் அமைச்சர் மூர்த்தி மற்றும் கலெக்டர் சங்கீதா தலைமையில், எம்.எல்.ஏ வெங்கடேஷன் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். காலை 7.20 மணியளவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகள் இதையடுத்து ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாய முறைப்படி முதலாவதாக முனியாண்டி சுவாமி கோயில் காளை உள்ளிட்ட 3 கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தங்கக்காசு வழங்கப்பட்டது.

இதையடுத்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. ஒரு சுற்றுக்கு 100 காளைகள் மற்றும் 50 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். மாலை 5 மணி வரை 10 சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும், பிடி கொடாத சிறந்த காளைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் டூவீலர், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, சைக்கிள், தங்கம், வெள்ளிக் காசுகள், பித்தளை, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. காளைகள் மற்றும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான தன்னார்வலர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. தவிர காளைகளுக்கும் காயம் ஏற்பட்டால் முதலுதவிக்கு மருத்துவ குழுவினர் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

ஜல்லிக்கட்டில் இன்று காலை 10 மணியளவில் 2வது சுற்று முடிவில் 5 பேர் காயமடைந்தனர். மதுரை சரக டிஐஜி ரம்யாபாரதி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊர்க்காவல் படை தீயணைப்பு தொடர் வீரர்கள் ஆங்காங்கே தனி அரங்கம் அமைத்து, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை அலங்காநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது. விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கலெக்டர் சங்கீதா, நடிகர் அருண் விஜய், இயக்குநர் விஜய் ஆகியோர் உடன் இருந்தனர். ஏராளமான வெளிநாட்டினரும், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அலங்கா நல்லூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

காளைகள், காளையர்களுக்கு மருத்துவ பரிசோதனை
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளை 100 காளைகள் வீதம் வரிசைப்படுத்தி, ஒவ்வொரு பேட்ஜாக பிரித்து அனுப்பும் பணியை போலீசார் மற்றும் வருவாய் துறை நிர்வாகம் மேற்கொண்டன. காளைகள் வாடிவாசலுக்கு செல்லும் முன், ஆன்லைன் பதிவு சான்று, காளைகளின் உடல் தகுதி சான்று உள்ளிட்ட இறுதி கட்ட கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பின்பு வாடிவாசல் வழியாக வெளியேற காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக 75க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் குழுக்களாக பிரிந்து பணிகளில் ஈடுபட்டனர். பரிசோதனையில் இறுதி கட்டமாக காளைகளின் உடல்திறன் மற்றும் கண்களில் மிளகாய் பொடி மற்றும் வேறு ஏதேனும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர். காளைகளின் நாக்கில் வைத்து பரிசோதனை செய்யும் ‘டங்க் அனலைசர்’ மூலம் மது போதை பரிசோதனை நடந்தது.

இதேபோல, வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு சான்று, வீரர்களின் புகைப்படம் சரிபார்த்தல், மது போதை பரிசோதனை, வயது, எடை, ரத்த அழுத்தம், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் தகுதி சோதனைகளுக்கு பின்பே வீரர்கள் களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர். சோதனைகள் அனைத்தும் அலங்காநல்லூர் வட்டார மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறை மூலம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு கதைக்களம் அமைந்தால் டூப் இன்றி நடிப்பேன்: நடிகர் அருண் விஜய் பேட்டி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் அருண் விஜய், சினிமா இயக்குனர் விஜய் ஆகியோர் இன்று கண்டுகளித்தனர். முன்னதாக நடிகர் அருண் விஜய் கூறுகையில், ‘‘தமிழர்களின் வீர விளையாட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல் முறையாக வந்து பார்க்கிறேன். மாடுபிடி வீரரை போல ஒரு கதைக்களம் அமைய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அப்படி கதை அமைந்தால் டூப் இல்லாமல் நடிப்பேன். தமிழரின் பாரம்பரியம் கொண்டாடப்பட வேண்டும். வீரர்கள் பாதுகாப்புடன் விளையாட வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டியை மிக சிறப்பாக்கியுள்ளார். மிஷன் படத்தின் ப்ரமோசனுக்காக வந்தேன். இந்த போட்டியை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி’’ என்றார்.

தலா ஒரு பவுன் தங்க மோதிரம் பரிசு
ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி கூறுகையில், ‘சிறந்த மாடுபிடி வீரர்கள் 2 பேர் மற்றும் சிறந்த 2 காளைகளுக்கும் தலா ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றார்.

The post மதுரை அருகே உலக புகழ்பெற்ற தமிழர் பாரம்பரிய திருவிழா: அலங்காநல்லூரில் அனல்பறக்கும் ஜல்லிக்கட்டு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Jallikattu ,Alankanallur ,Minister ,Udayanidhi Stalin ,jallikattu festival ,Thirunalam Thai Pongal ,Madurai Avaniapuram ,famous ,traditional festival ,Madurai: Jallikattu flying ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை