- மதுரை பாளமேடு ஜல்லிக்கட்டு
- பிரபாகரன்
- பாலமேடு
- மதுரை பிரம்பு
- பலமேடு ஜல்லிக்கட்
- பொங்கல்
- பாலமேட்
- மதுரை, ஜல்லிக்கட்டு
- தின மலர்
பாலமேடு: விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அருகே பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. இதில், சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் அடக்கினர். அலங்காநல்லூரில் நாளை நடக்கும் உலகப்புகழ் ஜல்லிக்கட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது.
மாட்டுப்பொங்கலான இன்று பாலமேட்டில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக ஆன்லைனில் பதிவு செய்த 1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். முன்னதாக காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. காலை 7 மணியளவில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் கலெக்டர் சங்கீதா தலைமையில், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் முன்னிலையில், அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசல் வழியாக 7 கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டன.
பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக திமிலை உயர்த்தி சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு பிடிகொடுக்காமல், போக்குகாட்டி களத்தில் நின்று விளையாடின. சுற்றுக்கு 100 காளைகள், 70 வீரர்கள் வீதம் களமிறக்கப்பட்டனர். காளைகளை அடக்க முயன்ற 40க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டன. படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும்.
போட்டியில் அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கும், பிடி கொடுக்காமல் விளையாடும் சிறந்த காளை உரிமையாளருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது. 2வது இடம் பிடிக்கும் காளை, வீரருக்கு பைக், நாட்டுப்பசு பரிசாக வழங்கப்படும். மேலும், தங்கக்காசு, கட்டில், பீரோ, அண்டா, கிரைண்டர், மிக்சி, சைக்கிள், வேட்டி, துண்டு ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இந்நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் தமிழரசன் 11 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்தார். பாலமேடு ஜல்லிக்கட்டில் 8 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் பாண்டீஸ்வரன் 3-ம் இடம் பிடித்தார். பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. பாலமேட்டில் 2020, 2022-ல் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதல் பரிசு வென்றவர் பிரபாகரன். சிறந்த காளையாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதலிடம் பிடித்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
The post விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: 14 காளைகளை அடக்கி பிரபாகரன் முதலிடம்! appeared first on Dinakaran.