×

பென்னிகுக் 183வது பிறந்தநாள்; தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை: பொங்கல் வைத்து கொண்டாடிய தென்மாவட்ட மக்கள்

கூடலூர்: முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக்கின் 183வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முல்லைப்பெரியாறு அணையைக் கட்டி, தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக். இவரது பிறந்தநாளான ஜன.15ஐ தென்மாவட்ட மக்கள் பென்னிகுக் பொங்கலாக கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019 முதல், இவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று பென்னிகுக்கின் 183வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில், அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் தேவையானவற்றை அறிந்து, அதனை உடனடியாக செயல்படுத்தி வருகிறது. விவாயிகளுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளும் உடனடியாக செய்து தரப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் தேனி கலெக்டர் ஷஜீவனா, எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகராஜன், பெரியகுளம் சரவணக்குமார், முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன், ஏஎஸ்பி மதுகுமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், கூடலூர் நகர்மன்றத் தலைவர் பத்மாவதி லோகந்துரை, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கோலிகுண்டு, கிட்டி, மான்கொம்பு சுற்றுதல், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளும், கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் தப்பாட்டாம், தேவராட்டம், கரகாட்டம், கிழவன்கிழவி, மாடாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தென்னங்கீற்றுகளால் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உரல், அம்மிக்கல் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உழவர்களின் ஏர் கலப்பை வடிவத்தில் செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மொத்தம் 183 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. வெளிநாட்டினர் கலந்து கொண்டு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

The post பென்னிகுக் 183வது பிறந்தநாள்; தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை: பொங்கல் வைத்து கொண்டாடிய தென்மாவட்ட மக்கள் appeared first on Dinakaran.

Tags : Pennyuk ,Southern District ,Tamil Nadu government ,KUDALUR ,COLONEL ,JOHN PENNIGUK ,MULLIPYRIYARU DAM ,MINISTER ,OF RURAL DEVELOPMENT ,MINISTER OF RURAL DEVELOPMENT ,I. Peryasami ,Mullaiperiyaru Dam ,South District ,Tamil ,Pongal ,
× RELATED நெல்லை, தூத்துக்குடிக்கு சென்னையில்...