×

இன்று அதிகாலை நடந்தது; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா கொடியேற்றம்: 24ம் தேதி தேரோட்டம்


திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 24ம் தேதி நடக்கிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெறும். இதில் முக்கிய திருவிழாவான பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான தைத்தேர் திருவிழா இன்று (16ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 2.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 3 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் கொடிப்படம் புறப்பட்டு வந்து காலை 4.45 மணிக்கு கொடியேற்றும் நடைபெற்றது.

பின்னர் காலை 6.15 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையை சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் இன்று மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு உள் திருவீதிகளான நான்கு உத்திர வீதிகளிலும் வலம் வந்து சந்தனு மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிவிட்டு கண்ணாடி அறை சென்றடைகிறார். நாளை காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 24ம் தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 5 மணிக்கு வருகிறார். அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 26ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருவார். அன்றுடன் விழா நிறைவடைகிறது.

The post இன்று அதிகாலை நடந்தது; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா கொடியேற்றம்: 24ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Taither Festival Flag Hoisting ,Srirangam Ranganathar Temple ,Chariot ,Trichy ,Taither festival ,Srirangam Ranganatha temple ,Therotam ,Trichy Srirangam Ranganathar Temple ,Bhuloka Vaikundam ,Taither festival flag ,Chariot on 24th ,
× RELATED புதுக்கோட்டையில் நார்த்தாமலை...