×

அடையாளம் தெரியாத வாகனத்தால் விபத்து ஏற்பட்டால் இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

புதுடெல்லி: அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை ஆண்டுதோறும் உயர்த்த ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988ன்கீழ், சாலை விபத்துகளை ஏற்படுத்தி விட்டு வாகனங்கள் நிற்காமல் செல்லும்போது, விபத்தில் உயிரிழப்போர் குடும்பத்துக்கு ஒன்றிய அரசு ரூ.2 லட்சம் இழப்பீடும், படுகாயமடைபவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சாலை விபத்துகளை கையாளுவதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்போர், படுகாயமடைவோருக்கு தற்போது வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை உயர்த்த ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கும்படி வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, பங்கஜ் மித்தல் அமர்பு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “ஆண்டுதோறும் பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. எனவே உயிரிழப்போர் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அளிக்கப்படும் இழப்பீடு தொகையை ஆண்டுதோறும் அதிகரிக்க முடியுமா என்பதை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் விபத்து இழப்பீடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நாடாளுமன்ற நிலைக்குழு விரிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு 8 வாரங்களுக்குள் தங்கள் முடிவை தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

 

The post அடையாளம் தெரியாத வாகனத்தால் விபத்து ஏற்பட்டால் இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union Govt. ,NEW DELHI ,Union government ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...