×

உழவர்களை போற்றும் உன்னத திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உழவர்களைப் போற்றும் உன்னத திருநாளான பொங்கல் திருநாள் இன்று உலகம் முழுவதும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதையொட்டி நேற்று காலை முதல் இரவு வரை பஜார் வீதிகளில் ஜவுளி, கரும்பு, மஞ்சள், பழங்கள் விற்பனை படுஜோராக நடந்தது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 12 லட்சம் பேர் புறப்பட்டு சென்றுள்ளனர். உழவர்களின் உழைப்பை போற்றும் வகையில் தமிழக மக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகையாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகவும், 2ம் நாள் மாட்டுப் பொங்கலும், 3வது நாள் கன்னிப் பொங்கல் எனும் காணும் பொங்கல் என 4 நாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்தனர். அந்த வகையில், போகி பண்டிகையான நேற்று மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்றனர். சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், கிண்டி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போகி கொண்டாடி, தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகியை கொண்டாடினர். சிறுவர்கள் மேளம் அடித்து உற்சாகத்தில் மகிழ்ந்தனர். அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ உள்ளனர். பொங்கல் பொங்கி வரும் போது ‘‘பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்” என கூறி மகிழ்ச்சி அடைய உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளனர். பொங்கல் திருநாளை ஒட்டி, பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் விழாவையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் புதுத் துணிகள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகை அன்று, அனைத்து வீடுகளிலும் கரும்பு, மஞ்சள் வைத்து கொண்டாடுவார்கள். இதனால் நேற்று காலை முதல் கரும்பு, மஞ்சள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர். ஒவ்வொறு பகுதிகளில் உள்ள சிறிய முதல் பெரிய மார்கெட் வரை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மாலையில் விற்பனை மேலும் விறுவிறுப்படைந்தது. வாழைப்பழம் ரகத்திற்கு ஏற்றார் போல் விற்கப்பட்டது. குறைந்தப்பட்சம் ரூ.500 முதல் ரூ.1000 வரை வாழைத்தார்கள் விற்பனையானது. பூக்கள் விலை 4 மடங்கு அதிகரித்து இருந்த போதிலும் பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். ெபாங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் வசிப்போர் கடந்த வியாழக்கிழமை முதல் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். ரயில், பஸ், கார்கள், விமானங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். கடந்த வெள்ளிக்கிழமையில் கூட்டம் மேலும் அதிகரித்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் பஸ், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இறுதி நாளான நேற்றும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் ஹவுஸ்புல்லாக காட்சியளித்தது. இடம் கிடைக்காதவர்கள் கடைசி நேரத்தில் முன்பதிவில்லா பெட்டிகளில் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறை சார்பில் கடந்த 2 நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு பேருந்துகளில் பயணிக்க 2,30,514 பேர் வரை முன்பதிவு செய்துள்ளனர். நேற்று நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,210 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டது. கடந்த 12ம் தேதி முதல் 13ம் தேதி இரவு 12 மணி வரை 7,670 பேருந்துகளில் 4,44,860 பயணிகள் பயணித்துள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் 2,210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இது கடந்த மூன்று வருடங்களில் ஒரே நாளில் இயக்கப்பட்ட அதிகபட்ச சிறப்பு பேருந்துகள் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நேற்று சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்க கூடுதல் நேரம் ஆனது. சென்னை – திருச்சி சாதாரண நாட்களில் 7 மணி நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகள் 11 மணி நேரம் எடுத்துக் கொண்டதாலும் மேலும் பேருந்துகளை சென்னைக்கு அடுத்த நடைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இது தவிர திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலம் விரிசல் கண்டதால் பேருந்துகள் மாற்று வழி பாதையில் இயங்கியதும் காலதாமதத்திற்கு காரணமானது. இதனால் சென்னையிலிருந்து பயணிகளை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில் சற்று காலதாமதம் ஆனது. நேற்று அதிகாலை ஐந்து மணி வரை தொடர்ந்து பணியாற்றி கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து பயணிகளை முழுவதுமாக தங்கள் ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரையில் ரயில், பஸ், கார்கள், விமானம் எனற சென்னையில் இருந்து மட்டும் சுமார் 12 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சென்னையில் நேற்று காலை முதல் சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் ெவறிச்சோடி காணப்பட்டது. சென்னையின் சாலை போக்குவரத்தின் இதய பகுதியாக கருதப்படும் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் குறைவான அளவிலேயே வாகனங்கள் சென்ற காட்சியை காணமுடிந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற தொடங்கியுள்ளது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகை முடிந்து, அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், தொடர்ந்து காணும் பொங்கல் என்று மக்கள் விமர்சையாக கொண்டாடுவர்.

 

The post உழவர்களை போற்றும் உன்னத திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Pongal ,K. Stalin ,Chennai ,Pongal Thirudan ,Tamils ,M.U. K. ,Stalin ,Pongal Festival ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...