×

33 வார்டுகளில் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிப்பு

தர்மபுரி, ஜன.14: தர்மபுரி நகராட்சி 33 வார்டுகளில் புகையில்லா போகி கொண்டாடும் வகையில் இன்று(14ம் தேதி)வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது. தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலிருந்து, தினசரி 28 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இன்று(14ம் தேதி) போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பழைய கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டி தீயிட்டு எரிக்காமல் தடுக்க, தர்மபுரி நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 33 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணி இன்று(14ம் தேதி) நடக்கிறது. நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் தலைமையில் 250 பணியாளர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். நகராட்சி சார்பில் 33 வார்டுகளிலும், நகராட்சி பள்ளிகளிலும் போகி பண்டிகை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இன்று(14ம் தேதி) போகி பண்டிகை நாளில், தேவையற்ற பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். தற்சமயம் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிப்பதால், நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு உபாதைகள் ஏற்படுகிறது. எனவே, போகி பண்டிகையின்போது பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். நகராட்சியில் 33 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது. மேலும், பசுமை பொங்கல் பண்டிகை காணுவோம், புகையில்லா போகி கொண்டாடுவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post 33 வார்டுகளில் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Bogi ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்