×

உற்சாகமாக தைப்பொங்கலை வரவேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை சிறப்பாக நடக்கிறது: முன்னேற்பாடுகள் தீவிரம்

அவனியாபுரம், ஜன. 14: மதுரை மாவட்டத்தில், தைப்பொங்கலன்று தமிழர்திருநாளை வரவேற்கும் வகையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா நாளை (ஜன.15) நடக்கிறது. இதையடுத்து இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 8ம் தேதி ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்தக்கால் ஊன்றும் விழா வணிக வரித்துதுறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த போட்டிகளை நடத்துகிறது. மாநகராட்சி சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் வினோத் தலைமையில், 150க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் மாடுபிடி வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை துறை சார்பாக இணை இயக்குனர் நடராஜ்குமார் தலைமையில் ஒன்பது குழுவினர் காளைகளுக்கு பரிசோதனைகள் நடத்த உள்ளனர். பாதுகாப்பு பணிகளை மாநகர கமிஷனர் லோகநாதன் தலைமையில், 4 துணை ஆணையர்கள், 10 உதவி ஆணையர்கள் கண்காணிப்பில் 1500 போலீசார் மேற்கொள்கின்றனர்.

கண்காணிப்பு கேமரா, நடமாடும் கழிப்பறை, குடிநீர் தொட்டி, இரண்டடுக்கு தடுப்பு வேலிகள், அவற்றின் மீது இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருவாய் துறை சார்பாக பரிசுப் பொருட்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெறும் வீரருக்கு தமிழ்நாடு முதலைமச்சா சார்பில் ஒரு காரும், சிறந்த காளைக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ஒரு காரும் வழங்கப்படவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நாளை காலை 7.30 மணிக்கு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.

அவருடன் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராண, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், அவனியாபுரம் வார்டு கவுன்சிலர் கருப்பசாமி மற்றும் மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு டோக்கன் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. க்யூஆர் கோடு கொண்ட டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே, ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியும். மாடுகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

The post உற்சாகமாக தைப்பொங்கலை வரவேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை சிறப்பாக நடக்கிறது: முன்னேற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Avaniyapuram jallikattu ,Taippongal ,Avaniyapuram ,Madurai district ,Jallikattu ,Tamil Day ,Thai Pongal ,Avaniyapuram jallikattu festival ,
× RELATED லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு...