×

தேங்காப்பட்டினம் அருகே நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு: தண்ணீரில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள்

நித்திரவிளை, ஜன.14: ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற பைபர் படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த படகில் இருந்த 2 மீனவர்கள் கடலில் குதித்து மயிரிழையில் உயிர்தப்பினர். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன் துறை பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் (50), அதே பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் (45). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை பைபர் படகு ஒன்றில் தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென படகின் உள்பகுதி தீப்பற்றி எரிய துவங்கியுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் இருவரும் உடனடியாக கடலில் குதித்தனர்.

கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இருவரும் அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்றொரு படகு மூலம் மீட்கப்பட்டனர். பின்னர் அந்த படகில் இருந்தவர்களுடன் சேர்ந்து தீவிபத்து ஏற்பட்ட படகில் எரிந்த தீயை அணைக்க போராடினர். ஆனாலும் தீப்பிடித்து படகின் பெரும்பாலான பகுதி சேதமடைந்தது. படகில் தீப்பற்றி எரிவதும், அதில் இருந்து மீனவர்கள் கடலில் குதித்து தப்பிப்பது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் 2 பேரும் உயிர்பிழைத்துள்ளனர். இதுகுறித்து குளச்சல் கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேங்காப்பட்டினம் அருகே நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு: தண்ணீரில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள் appeared first on Dinakaran.

Tags : Tengapatnam ,Nithravila ,Franklin ,Marthandan ,Kollangode, Kumari district ,
× RELATED பரக்காணி பகுதியில் தடுப்பணை...