×

எட்டயபுரம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

எட்டயபுரம்,ஜன.14: எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி அருகே இரண்டு கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்கள் வீரப்பட்டி கிராமம் வழியாக தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு டாரஸ் லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு செல்லும் லாரிகள் அதிகளவு பாரம் ஏற்றி செல்வது மட்டுமின்றி அதிவேகமாக செல்வதால் வீரப்பட்டி கிராமத்தில் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை இருப்பதாகவும், குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடனே செல்லவேண்டியுள்ளதால் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் லாரிகள் வழக்கம் போல அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்வதாக கூறி கற்களை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற எட்டயபுரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிக பாரம், அதிக வேகமாக சென்ற லாரி மீது அபராதம் விதிப்பதாகவும், இனிமேல் இது போன்று அதிக பாரம் ஏற்றிக்கொண்டு லாரிகள் அதிவேகமாக சென்றால் லாரியை பறிமுதல் செய்து விடுவோம் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.அதிக பாரம் ஏற்றிக்கொண்டு லாரிகள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமின்றி சாலையும் சேதமடைந்து விடுவதால் தங்கள் கிராமத்திற்கு அரசு பஸ் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதாகவும், பலமுறை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும், லாரிகள் கண்டுகொள்வதில்லை, வழக்கம் போல வேகமாக சென்று வருவதாகவும், இதற்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post எட்டயபுரம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ettayapuram ,Veerapatti ,Thoothukudi-Madurai National Highway ,Dinakaran ,
× RELATED எட்டயபுரம் அருகே நீர்வரத்து ஓடை,...