×

பொங்கல் விடுமுறைக்கு கூட்டம் அலைமோதும் நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு: பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

 

கூடுவாஞ்சேரி, ஜன.14: பொங்கல் விடுமுறையையொட்டி கூட்டம் அலைமோதும் நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு முனையத்தின் நவீன பேருந்து நிலையத்தில் இருந்து பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களாகவே ஏராளமான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது. இங்கு பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை தினசரி பல்வேறு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து, அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று சனிக்கிழமை வார இறுதிநாள் என்பதால் கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். காலை 9 மணி முதல் 11 மணி வரை ஆய்வு செய்து, பொங்கல் விடுமுறையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கின்றனரா என அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக இயக்கப்படும் பேட்டரி வாகனத்தின் பயன்பாடு குறித்தும், பயணிகளின் சந்தேகங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மக்கள் உதவி மையத்தில் பயணிகளுடன் அணுகுமுறை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து நடைமேடை அருகே இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்திற்குச் சென்று குடிநீர் அருந்தி ஆய்வு செய்தார். மேலும், கழிவறைகள் சுத்தமாக உள்ளதா என உள்ளே சென்று பார்வையிட்டார். இதனையடுத்து, பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம், பேருந்து நிலையம் எவ்வாறு கட்டப்பட்டுள்ளது எனவும், அறிவிப்பு பலகைகள் உள்ளதா எனவும் கேட்ட்றிந்த அவர், நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? அந்த பேருந்து நடைமேடை உங்களுக்கு தெரியுமா எனவும் கேட்டறிந்தார். மேலும், தாய்மார்கள் தாய்ப்பாலூட்டும் அறைக்குச் சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து, மாநகர பேருந்துக்கும், அரசு விரைவு பேருந்துக்கும் இடையே உள்ள சுற்றுச்சுவர் இடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு பயணிகள் எளிதில் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், சிஎம்டிஏ அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.

ஆய்வின்போது, நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சமயமூர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் அன்சூல்மிஸ்ரா, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post பொங்கல் விடுமுறைக்கு கூட்டம் அலைமோதும் நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு: பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Clambakkam bus station ,Pongal ,Guduvanchery ,Government ,Sivadasmeena ,Klambakkam ,Chennai Vandalur ,Klambakan… ,Klambakam Bus Station ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...