×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னைக்கு 1 லட்சம் ஆடுகள் வருகை: ரூ90 கோடிக்கு விற்பனை


சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னைக்கு 1 லட்சம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ90 கோடிக்கு விற்பனை சூடுபிடித்தது. தமிழகத்தில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே ஆட்டு சந்தையில் விற்பனை என்பது களைகட்டி காணப்படும். இந்த நிலையில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்ததும் காணும் பொங்கல் அன்று அனைவரின் வீடுகளிலும் அசைவ உணவுகளை சமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதுவும் காலையிலேயே அனைவரின் வீடுகளிலும் அசைவ உணவு கமகமக்கும். அசைவ உணவு இல்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஆடு, கோழி இறைச்சி சமையல் இருக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை என்பதால் ஆட்டு சந்தை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர். வழக்கமான நாட்டு ரகங்களுடன், ஐதராபாத் ரக காது ஆடுகளும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

மேலும் மலப்பாரி, பிட்டெல், சிரோகி, தலைச்சேரி, ஜம்னாபாரி உள்ளிட்ட வெளிமாநில ஆடு ரகங்களும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆடுகள் விற்பனை அதிகமாகவே இருந்தது. வியாபாரிகள் ஆடுகளை எடைக்கு ஏற்றார் போல் பார்த்து வாங்கி சென்றனர். சென்னைக்கு மட்டும் 1 லட்சம் ஆடுகள் இறைச்சிக்காக வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக சென்னை புளியந்தோப்பு ஆட்டு தொட்டி, ரெட்டேரி சந்தை, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஆடுகள் மொத்தமாக கொண்டுவரப்பட்டு விற்பனை சூடுபிடித்து வருகிறது.

இதுவரை சென்னைக்கு 30 ஆயிரம் ஆடுகள் வந்துள்ளது. மீதமுள்ள ஆடுகள் அடுத்தடுத்த நாட்களில் சென்னை வர உள்ளது. இந்த ஆடுகளில் 60 ஆயிரம் ஆடுகள் சென்னையின் இறைச்சி தேவைக்காக வெட்டப்பட உள்ளது. மீதமுள்ள 40 ஆயிரம் ஆடுகள் விழுப்புரம், புதுச்சேரி, நெல்லை மற்றும் மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூ9 ஆயிரம் வரை விற்பனையானது. இதன் மூலம் ரூ90 கோடி அளவுக்கு ஆட்டு இறைச்சி விற்பனை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற வாய்ப்புள்ளது. பொங்கலுக்கு மறுநாள் செவ்வாய்கிழமை திருவள்ளுவர் தினம் என்பதால் அன்றைய தினம் இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருக்கும். மறுநாள் புதன்கிழமை வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டு இறைச்சி விற்பனை நடைபெறும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் கோழி இறைச்சிக்காக கோழிகளும் கடைகளில் வந்து குவிந்துள்ளன.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னைக்கு 1 லட்சம் ஆடுகள் வருகை: ரூ90 கோடிக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pongal festival ,Tamil Nadu ,Pongal ,Diwali ,Ramzan ,Christmas ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...