×

களைகட்ட தயாராகிறது மதுரை; பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் ஜரூர்

* சிறந்த வீரர், காளைக்கு கார்கள் பரிசு
* முதல்வர், அமைச்சர் உதயநிதி வழங்குகின்றனர்

அலங்காநல்லூர்: பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இதில், பொங்கல் தினமான நாளை (ஜன.15) அவனியாபுரம், மறுநாள் மாட்டுப்பொங்கல் தினத்தில்(ஜன.16) பாலமேடு, ஜன.17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற உள்ளன. இதற்காக வாடிவாசல், பார்வையாளர் பகுதி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு நடக்கும் மஞ்சமலை ஆற்றுத்திடலில் பாதுகாப்புக்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல அலங்காநல்லூரிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வாடிவாசலில் வண்ணம் பூசப்பட்டு, பொதுமக்கள் சிரமமின்றி பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து பாலமேட்டில் ஜல்லிக்கட்டை நடத்தும் மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டியின் செயலாளர் பிரபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமிக்க மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு 1,200 காளைகளை பங்கேற்கச் செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். ஜல்லிக்கட்டு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். சிறந்த காளைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படும். அதேபோல் சிறந்த மாடுபிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.

The post களைகட்ட தயாராகிறது மதுரை; பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் ஜரூர் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Jallikattu ,Palamedu, Alankanallur ,CM ,Minister ,Udayanidhi ,Alankanallur ,Jallikattu festival ,Palamedu, ,Avaniyapuram ,Thai Pongal festival ,
× RELATED மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை...