×

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு: அமித்ஷாவுடன் தமிழக எம்.பிக்கள் சந்திப்பு; உடனடியாக நிவாரண நிதி வழங்க வலியுறுத்தல், ஜன.27க்குள் வழங்கப்படும் என உறுதி

புதுடெல்லி: சென்னை மற்றும் தென் மாவட்டங்களின் வெள்ள பாதிப்புகள் குறித்ததான நிவாரண நிதி வரும் 27ம் தேதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அனைத்துகட்சி எம்பிக்கள் அடங்கிய குழுவிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது.

இதைத்தொடர்ந்து டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப்பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. வரலாறு காணாத இந்த கனமழையின் காரணமாக தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசு சார்பில் ரூ.6000 நிவாரணமாக அறிவிக்கப்பட்டதோடு, உடனடியாக வழங்கப்பட்டது.

மேலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலை பராமரிப்பு, தேவையான நிவாரண பொருட்கள் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கியது. இதையடுத்து வெள்ள பாதிப்புகளை ஒன்றிய குழுவும் நேரில் வந்து பார்வையிட்டு சென்றது. இதுபோன்ற சூழலில் கடந்த மாதம் 19ம் தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 3ம் தேதி கேலோ இந்தியா துவக்க விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க டெல்லி சென்ற தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கிவிட்டு, வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை விரைந்து வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியிருந்தார். ஆனால் தற்போது வரையில் தமிழ்நாடு வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் எட்டு பேர் கொண்ட அனைத்துக் கட்சியின் எம்பிக்கள் குழு நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது எம்பிக்கள் ஜெயகுமார் (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), சுப்பராயன் (சி.பி.எம்), சு. வெங்கடேசன் (சி.பி.ஐ), ரவிகுமார் (வி.சி.க), நவாஸ்கனி (முஸ்லீம் லீக்), சின்ராஜ் (கொங்கு நாடு மக்கள் கட்சி) ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து ஒன்றிய அமைச்சரின் சந்திப்புக்கு பிறகு எம்பி டி.ஆர்.பாலு இல்லத்தில் தமிழக அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு டெல்லியில் கூட்டாக அளித்த பேட்டியில்,\\” ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு அனைத்து கட்சிகளின் குழு இன்று (நேற்று) சந்தித்தது. அப்போது வெள்ள பாதிப்புகள், அதனால் ஏற்பட்ட இழப்புகள் ஆகியவை குறித்து அவரிடம் தெளிவாக எம்பிக்கள் குழு தரப்பில் எடுத்துரைத்தோம், குறிப்பாக இந்த சந்திப்பின் போது சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் ஆகிய இரண்டு வெள்ள பாதிப்பு விவகாரத்தில் மாநில பேரிடர் நிதி முழுவதும் செலவிடப்பட்டுள்ளது.

அதனால் தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழ்நாடு வெள்ள பாதிப்புக்கு, அதாவது மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தற்காலிக நிதியாக ரூ.7033.45கோடியும் அதேப்போன்று நிரந்தர நிதியாக ரூ.12,659.24 கோடியும், இதேப்போன்று தென் மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பை கருத்தில் கொண்டு தற்காலிக நிதியாக ரூ.8,612.14கோடியும், நிரந்தர நிதியாக ரூ.9,602.14கோடியும், மொத்தமாக ரூ.37,907.21 கோடி வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வலியுறுத்தினோம்’’ என்றனர்.

இதையடுத்து தமிழக எம்பிக்கள் குழுவின் கோரிக்கையை கேட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘வெள்ள பாதிப்பு நிவாரண நிதி விவகாரத்தில் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய புறக்கனிக்கவில்லை. குறிப்பாக இந்த பாதிப்பின் அனைத்து பிரச்சனைகளையும் நான் நன்றாக அறிவேன். ஏனெனில் தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டது என்பது மிகப்பெரிய பேரிடராகும். இருப்பினும் தற்போது தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஒன்றிய குழு அங்கு சென்றுள்ளது.

அவர்கள் ஆய்வை முடித்து விட்டு வரும் 21ம் தேதி மீண்டும் டெல்லி திரும்ப உள்ளார்கள். இதனைத்தொடர்ந்து ஒன்றிய உள்துறை, நிதித்துறை, விவசாயத்துறை ஆகிய மூன்று துறைகளும் குழு தாக்கல் செய்யும் அறிக்கையை அடிப்படையாக வைத்து கலந்து ஆலோசித்து ஜனவரி 27ம் தேதிக்குள் போதுமான நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’’ என உறுதியளித்துள்ளார். இந்த தகவலை தமிழ்நாடு எம்பிக்கள் குழுவினர் தெரிவித்தனர்.

* டிசம்பர் 3, 4ல் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், டிசம்பர் 17,18ல் பெய்த வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

* டிச.19ல் டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

The post தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு: அமித்ஷாவுடன் தமிழக எம்.பிக்கள் சந்திப்பு; உடனடியாக நிவாரண நிதி வழங்க வலியுறுத்தல், ஜன.27க்குள் வழங்கப்படும் என உறுதி appeared first on Dinakaran.

Tags : Nadu ,Tamil Nadu ,Amitsha ,PBUs ,New Delhi ,Union Interior Minister ,Tamil Nadu MSPs ,Chennai ,Southern Districts ,Amitshah ,Dinakaran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...