×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் இன்று தொடக்கம்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடர்


மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான இதில் ஆண்கள், மகளிர் ஒற்றையர் பிரிவில் தலா 128 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இது தவிர மகளிர், ஆடவர் இரட்டையர் பிரிவுகளில் தலா 64 ஜோடிகளும் விளையாட உள்ளன. இத்துடன் கலப்பு இரட்டையர், ஜூனியர், வீல்சேர் போட்டிகளும் நடைபெற உள்ளன. ஆண்கள் பிரிவில் நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமானநோவாக் ஜோகோவிச் (செர்பியா), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), டானில் மெத்வதேவ் (ரஷ்யா), யானிக் சின்னர் (இத்தாலி), ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), அலெக்சாண்ர் ஸ்வெரவ் (ஜெர்மனி), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகின்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), நடப்பு சாம்பியன் அரினா சபலென்கா (பெலாரஸ்), எலனா ரைபாகினா (கஜகிஸ்தான்), கோகோ காப், ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா) என முன்னணி வீராங்கனைகளிடையே பட்டம் வெல்ல கடும் போட்டி நிலவுகிறது. மகப்பேறுக்கு பிறகு நவோமி ஒசாகா (ஜப்பான்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் நீண்ட நாட்களுக்கு பிறகு களம் திரும்புகின்றனர். ஆஸி. ஓபன் பட்டத்தை 2 முறை வென்ற ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 2023ம் ஆண்டு காயம் காரணமாக 2வது சுற்றுடன் வெளியேறினார். அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்த அவர் இந்த முறை ஆஸி. ஓபனில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அதற்காக பிரிஸ்பேன் ஓபனிலும் விளையாடினார்.

மீண்டும் காயம் ஏற்பட்டதால் பாதியில் வெளியேறியவர், ஆஸி ஓபனில் விளையாட மாட்டேன் என்று அறிவித்தது டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. களத்தில் இந்தியர்கள்: இந்தியாவின் ரோகன் போபண்ணா கடந்த ஆண்டு யுஎஸ் ஓபனுடன் ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் பல்வேறு தரப்பின் வற்புறுத்தல் காரணமாக தொடர்ந்து விளையாடியும், சாதித்தும் வருகிறார். நேற்று முடிந்த அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் 2வது இடம் பிடித்தார். அவருடன் விளையாடி வரும் மேத்யூ எப்டனுடன் (ஆஸ்திரேலியா) இணைந்து ஆஸி. ஓபனிலும் இந்த முறை களம் காண்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றின் 3 ஆட்டங்களிலும் வென்ற மற்றொரு இந்திய வீரர் சுமித் நாகல் (26 வயது, 139வது ரேங்க்) முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். தகுதிச் சுற்றில் பிரான்ஸ் வீரர் ஜெஃப்ரி , ஆஸி. வீரர் வின்டர் ஆகியோரை முறையே 2-0 என நேர் செட்களில் வீழ்த்தினார். தொடர்ந்து நேற்று 3வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஸ்லோவாக்கியா வீரர் அலெக்சையும் 2-0 என நேர் செட்களில் சாய்த்தார். சுமித் முதல் சுற்றில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்லிக் (26 வயது, 31வது ரேங்க்) உடன் மோத உள்ளார்.

The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் இன்று தொடக்கம்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடர் appeared first on Dinakaran.

Tags : Australian Open Tennis ,Melbourne ,Grand Slam series ,Australian Open Grand Slam ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை