×

முத்துக்கள் முப்பது: தரணி போற்றும் தை மகளே, வருக! சகல நலன்களும் தருக!!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பொங்கல் பண்டிகை – 15-1-2024

1. முன்னுரை

மாதங்கள் 12. சித்திரை முதல் பங்குனி வரை உள்ள இந்த மாதங்களின் பெயர்களை கவனித்துப் பார்த்தால் நான்கு எழுத்துக்களிலோ, மூன்று எழுத்துக்களிலோ அல்லது இரண்டு எழுத்துக்களிலோ இருக்கும். மார்கழி நான்கு எழுத்து பெயர் கொண்ட மாதம். ஆனி மற்றும் மாசி இரண்டு எழுத்து பெயர் கொண்ட மாதம். வைகாசி, ஆவணி மூன்றெழுத்து பெயர் கொண்ட மாதம். ஆனால் ஓரெழுத்துப் பெயர் கொண்ட மாதம் ஒன்றுதான். அதுதான் மங்களகரமான “தை” மாதம். அந்த மாதத்தின் சிறப்புகளையும், அதில் நடைபெறும் ஆன்மிக விழாக்களைப் பற்றியும் இந்த முப்பது முத்துக்கள் தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

2. தை பிறந்தால் வழி பிறக்கும்

மாதங்களில் மிக உயர்வானது தை மாதம். ஒருவன், தன்னுடைய வாழ்வின் முன்னேற்றத்திற்கு விடியலை எதிர்பார்ப்பது போல தை மாதத்தை ஆவலோடு எதிர்பார்ப்பான். காரணம், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று பழமொழியே இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று சொன்னால், தை மாதத்தை “மகர மாதம்” என்பார்கள். மகர ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடிய மாதம். சூரிய உதய மாதம் என்று சொல்வார்கள்.

அதாவது, நமக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தேவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டு மணி நேரம் அதில் தட்சிணாயனம் என்பது இரவு நேரம். உத்தராயணம் என்பது பகல் நேரம். அந்த பகல் நேரத்தில் துவக்கம் தை மாதம் பல பெருமாள் கோயில்களில் இதையொட்டி வாசல்கள் உண்டு. திருவெள்ளறை, குடந்தை சார்ங்கபாணி கோயில் போன்ற ஆலயங்களில் இந்த வாசல்கள் உண்டு. உத்தராயண காலத்தில் வடக்கு வாசல் மூலமாக பெருமாளைச் சேவிக்கச் செல்ல வேண்டும். தட்சிணாயன காலத்தில் தெற்கு வாசல் மூலமாக பெருமாளைச் சேவிக்கச் செல்ல வேண்டும்.

3. இந்த மாதத்தில் புண்ணியம் மட்டுமே செய்ய வேண்டும்

காலச் சக்கரத்தின் பத்தாவது ராசி மகர ராசி. இந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலம்தான் தை மாதம். இந்த மகர ராசி சனிக்கு உரிய ராசி. சனிக்கு கர்மகாரகன் என்ற பெயர். செயலைத் தூண்டுபவன் மற்றும் செயலின் பயனை அளிப்பவன் என்று சொல்வார்கள். அதனால்தான் பத்தாம் இடமாகிய மகரத்தையும், பதினோராம் இடமாகிய கும்பத்தையும் அடுத்தடுத்து சனிக்கு வீடாகக் கொடுத்தார்கள். என்ன காரியம் செய்கிறோமோ அதனுடைய விளைவுகள் (நல்லதோ, கெட்டதோ) அவன் தந்துவிடுவான். எனவே தை மாத தொடக்கத்தில் இருந்து நம்முடைய செயல்களை புண்ணிய செயல்களாகத் தொடங்க வேண்டும்.

4. மகர சங்கராந்தி

மார்கழி மாதம் முடிந்து தை மாதம் முதல் தேதி என்று சூரியன் மகர ராசிக்குள் நுழையும் நேரம், `மகரசங்கராந்தி’ எனப்படுகிறது. சங்கரம் என்றால் கலப்பு. அந்தி என்றால் இரண்டு மாதங்களும் இணையும் நேரம் என்று பொருள். தை மாதத்திற்கு உரிய தேவதை நாராயணன். அவருடைய நிறம் நீலம். ஆயுதம் நான்கு சங்குகள். திசை மேற்கு. எல்லா காரியங்களுக்கும் அவனே காரணம். நம்முடைய விரோதிகள் எவ்வளவு வலிமை ஆனவர்களாக இருந்தாலும் அவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவான். எனவே, இந்த மாதத்தில் `நாராயணா… நாராயணா…’ என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

5. தை மாதப்பிறப்பின் கிரக நிலை

இந்த ஆண்டு தை மாதம் பிறக்கக்கூடிய காலத்தை நாம் ஆராய்ந்து பார்ப்போம். மேஷ ராசியில் குரு இருக்கிறார். அவர் வக்கிரகதி நீங்கி சுபயோகத்தோடு இருக்கின்றார். கன்னியில் கேதுவும், மீனத்தில் ராகுவும் இருக்கின்றார்கள். கும்ப ராசியில் சனி பிரவேசித்திருக்கிறார். சதய நட்சத்திரத்திலே தை மாதம் பிறக்கிறது. இது அற்புதமான கிரக நிலை. மாத ராசியான மகர ராசி எந்த தீய கோள்களாலும் பார்க்கப்படவில்லை என்பதால், இந்த தைமாத பிறப்பு அடுத்து வரும் மாதங்களில் மங்களகரமான பலன்களைத் தரும். அதற்கான பிரார்த்தனையை இந்த தை முதல் நாள் முதல் தொடங்க வேண்டும்.

6. ஆண்டாள் திருக்கல்யாணம்

தை மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகையின் தொடக்கம் என்பது மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகிப் பண்டிகை அன்றே தொடங்கிவிடும். மார்கழி மாதத்திற்கே உரிய திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி பூர்த்தி அடைகின்ற நாள் போகிப் பண்டிகை. இந்த நாளில் தான் பகவான் மகாவிஷ்ணு கண்ணனாக ஆண்டாளுக்கு காட்சி தந்தார். அன்று பல விஷ்ணு ஆலயங்களில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவது உண்டு.

7. போகிப் பண்டிகை

பொங்கல் பண்டிகைக்கு முதல் தினம் அதாவது, தட்சிணாயனத்தின் கடைசி தினம் கொண்டாடப்படுவது, போகிப் பண்டிகை. பழையன கழிதலும்புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப, பழைய பொருட்களை எல்லாம் நெருப்பிலிட்டு பொசுக்கும் நாள், இந்த நாளிலே உபயோகப்படுத்தப்படாத அல்லது உபயோகம் இல்லாத பொருட்களை மட்டும் நாம் நெருப்பிலிட்டு பொசுக்கக் கூடாது. நம்முடைய முன்னேற்றத்திற்கு உபயோகம் இல்லாத எண்ணங்களையும், நம்முடைய ஆன்மிக உணர்வுக்கு தடையாகிய செயல்கள் போன்றவற்றையும் போக்கிக் கொள்வதுதான் போகிப்பண்டிகையின் நோக்கம்.

8. போகியும் கோவிந்தராஜ பட்டாபிஷேகமும்

போகி என்பது இந்திரனுக்குரிய பெயர்களில் ஒன்று. இது குறித்து பாகவதத்தில் ஒரு கதை உண்டு. கண்ணன் அவதாரம் செய்து ஆயர்பாடியில் இருந்த பொழுது, ஆயர்கள் போகி என்று அழைக்கப்படும். இந்திரனுக்கு பூசை போட்டு விழா நடத்தினர். ஆனால், கண்ணன் அந்த பூசையை, இந்திரனுக்குச் செய்வதைவிட, உங்களையும் உங்கள் பசு மாடுகளையும் காக்கின்ற கோவர்த்தன மலைக்குச் செய்யுங்கள்” என்றான். எல்லோரும் கோவர்த்தன கிரிக்குச் சென்று பூஜை இட்டு வணங்கினர்.

இந்திரன் கோபம் கொண்டு பெருமழை பெய்யச் செய்தான். ஆனால் பகவான் கண்ணன், ‘‘நீங்கள் எந்த மலைக்கு பூஜை செய்தீர்களோ, அந்த மலையே உங்களைக் காக்கும்” என்று சொல்லி, அந்த மலையை தன்னுடைய விரலில் ஏந்திக் கொண்டார். 7 நாட்கள் விடாமல் மழை பெய்தும் ஆயர்களுக்கு ஒரு தீங்கும் நேரவில்லை. தன்னுடைய தவறை உணர்ந்த இந்திரன், ஆயர்களுக்குத் துணையாக கண்ணன் நிற்கும் பொழுது, தம்முடைய வீரமோ கோபமோ பயன்படாது என்று உணர்ந்து, கண்ணனைப் பணிந்தான். ‘‘எங்களுக்கெல்லாம் நீதான் அரசன்’’ என்று கண்ணனுக்கு கோவிந்தராஜப் பட்டாபிஷேகம் செய்தான். அன்றிலிருந்து போகிப்பண்டிகை விரிவாகக் கொண்டாடப்படுகிறது.

9. நிலைப் பொங்கல்

வீட்டை தூய்மைப்படுத்தி, புதிய வர்ணம் தீட்டி, பொங்கலுக்கு தயார்படுத்துகின்ற நாள் போகிப் பண்டிகை நாள். இக்காலத்தில் இதை பெரிய அளவில் கொண்டாடவிட்டாலும், பழைய காலத்தில் ஒவ்வொருவரும் போகிப் பண்டிகை அன்று வீட்டைத் தூய்மைப்படுத்தி, பழைய பொருட்களை எல்லாம் நெருப்பில் எரித்து போகிப் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். போகிப் பண்டிகை அன்று அதிகாலை நீராடி பல்வேறு காய்கறிகள் சமைக்கப்பட்ட உணவை பகவானுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

போகி அன்று, வைகறையில் `நிலைப் பொங்கல்’ வைக்கப்படும். வீட்டின் முன் வாயில் நிலைக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும் பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்குவர். அன்று போளி, வடை, பாயசம், மொச்சை, சிறு தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும். பிறகு அனைவரும் உண்டு களிக்க வேண்டும்.

10. திருப்பாவை சாற்றுமறை

தை மாதத்தில், முதல் நாள் திருப்பாவை சாற்றுமறை. மார்கழி மாதத்தை திருப்பாவை மாதம் என்று சொல்லும் மரபு வைணவத்தில் உண்டு. ஆண்டாள் முப்பது பாடல்களை இயற்றினாள். ஆனால், மார்கழி மாதம் பெரும்பாலும் 29 நாட்களைக் கொண்டதாக இருக்கும். எனவே, மார்கழி மாதம் முழுவதும் தினம் காலை திருப்பாவை ஓதினாலும் அதன் நிறைவு என்கின்ற சாற்றுமறை திருநாள் தை மாதம் முதல் நாள் தான் நடைபெறும்படியாக இருக்கும் எனவே தை மாதம் முதல் நாள் திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை சேவித்து சாற்றுமறை செய்வார்கள்.

30-ஆம் பாசுரமான கீழ்க்காணும் பாசுரத்தை சொல்லி நிறைவு செய்வார்கள்.

`வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் –
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
எம்பாவாய்.’

அன்று பெருமாள் ஆண்டாள் சேர்த்தியாக புறப்பாடும் நடைபெறும் தை முதல் நாள் அன்று இந்தப் புறப்பாட்டினை கண்டுகளித்து ஆண்டாள் அருள் பெறலாம்.

11. தைப்பாவை

திருப்பாவையைப் போலவே தை மாதத்தை வரவேற்று தைப்பாவை என்று ஒரு அழகான காரியத்தை கவியரசு கண்ணதாசன் பாடியிருக்கிறார். தைமகள் வருகையால் தமிழர்கள் எல்லா மேன்மைகளும் அடைய வேண்டும். தமிழ் சிறக்க வேண்டும். கன்னியருக்கு திருமணம் கைகூட வேண்டும். வீரமும் ஈரமும் மலர வேண்டும் என்று சங்க கால தமிழர் பண்புகளை நினைவு படுத்தும் வண்ணம் அற்புதமான சந்த லயத்தோடு பாடியிருப்பார். அதில் இப்படி அவர் தைமகளை வரவேற்கின்றார்.

“எந்தமிழர் கோட்டத்து இருப்பார் உயிர்வளர
எந்தமிழர் உள்ளத்து இனிமைப் பொருள்மலர
எந்தமிழர் கைவேல் இடுவெங் களம் சிவக்க
எந்தமிழர் நாவால் இளமைத் தமிழ் செழிக்க
முந்து தமிழ்ப்பாவாய்; முன்னேற்றம் தான் தருவாய்
தந்தருள்வாய் பாவாய் தைவடிவத் திருப்பாவாய்
வந்தருள்வாய் கண்ணால் வாழ்த்துரைப்பாய் தைப்பாவாய்”

12. மங்கல ஓசை கேட்கும் தை மாதம்

தொண்டரடிப் பொடியாழ்வாரும் ஆண்டாளும், சைவத்தில் மாணிக்கவாசகரும், தங்கள் திருப்பள்ளி எழுச்சி பாடல்களிலே விடியல் காலையில் கேட்கும் பறவைகளின் ஒலிகளையும், மாடுகள் கழுத்தில் அசையும் மணி ஒலிகளையும், அற்புதமாகப் பாடியிருப்பார்கள். அதைப் போலவே மார்கழி முடிந்து தை விடியலில் தைமகள் வரும் நேரம், எத்தனை மங்கல ஓசைகள் காதில் கேட்கும் என்பதை, கவியரசு கண்ணதாசன் மிக அற்புதமானவரிகளிலே, அத்தனை மங்கல ஓசைகளையும் பட்டியலிட்டு இருப்பார்.

“காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்

வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலெழுவாய் தைப்பாவாய்’’

13. சூரியனை வரவேற்கும் விழா

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை. தமிழர்களுடைய வழிபாடு, பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்ததாகவும், தாங்கள் வாழும் நிலங்களைச் சார்ந்ததாகவும் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்) இருந்திருப்பதை நாம் சங்க இலக்கியங்களில் இருந்து அறியலாம். அந்த அடிப்படையில் புதியதோர் எழுச்சியும் விழிப்புணர்வும் பிறக்கும் நாளாக அமைந்து விடுகிறது பொங்கல் நாள். பயிர்களும் உயிர்களும் வாழ மிக முக்கியம் சூரியன்தான் இன்னார் இனியார் என்று கருதாமல் உலகமெங்கும் ஒளிபாய்ச்சும் சூரியனை வரவேற்று வழிபாடு நடத்தும் விழாவாக தை மாதம் முதல் நாளைக் கொண்டாடுகின்றோம்.

அன்று பொங்கல் படையல் சூரிய பகவானுக் குத்தான். விஷ்ணு புராணத்தின் படி 12 ஆதித்யர்கள் உள்ளனர். அவர்கள், அம்சன், ஆர்யமான், பாகன், துத்தி, மித்திரன், புஷன், சக்ரன், சாவித்திரன், துவச்த்திரன், வருணன், விஷ்ணு, விவஸ்வத் ஆகியோராகும். மற்ற புராணங்களில் யமன், வருணன், இந்திரன் போன்றோரும் ஆதித்யர்கள் என்று கூறப்பட்டுள்ளது. பொங்கல் முதல் நாள் பண்டிகையில் இந்த ஆதித்யர்களுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

14. சங்க இலக்கியத்தில் இந்த தைத்திருநாள்

சங்க இலக்கியத்தில் தைத்திருநாள் பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன,நற்றிணையிலும், நல்ல குறுந்தொகையிலும், புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை முதலிய பழமையான நூல்களிலும் பொங்கல் பண்டிகையை, எப்படி தமிழர்கள் கொண்டாடினார்கள் என்கிற குறிப்புக்கள் காணப்படுகின்றன.

‘‘மருளியான் மருளுற இவனுற்றது எவனென்னும்
அருளிலை இவட்குஎன அயலார்நிற்பழிக்குங்கால்
வையெயிற் றவர்காப்பண் வகையணிப் பொலிந்துநீ
தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ’’

என்கின்ற கலித்தொகை வரி அக்காலத்தில் நோன்பு நோற்று நீராடி தைப்பொங்கல் நிகழ்வைக் கொண்டாடினார்கள் என்பதை உணர்த்தும். ‘தையில் நீராடிய தவம்’ என்னும் தொடர், பொருள் பொதிந்தது.இந்தப் பாடல் பகுதியால், கன்னியர் தையில் நீராடுவதின் நோக்கமும் பயனும் புலனாவதோடு, தையில் நீராடுதல் ஒருவகைத் தவ-நோன்பு என்பதும் புலப்படும். பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுவது சிறப்பாகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

15. மகர சங்கராந்தி

தை முதல் நாளை மகர சங்கராந்தி என்று கொண்டாடுகிறார்கள். அன்று சூரியன் தென் திசை பக்கமாக சஞ்சரிப்பதை நிறுத்தி, வடதிசை பக்கமாக தன்னுடைய தேரை செலுத்தத் தொடங்குகின்றான் இதனைத் தான் உத்தராயன புண்ணிய காலம் என்று சொல்வார்கள். தை மாதம் முதல் ஆனி வரை, உத்தராயண காலம். இது தேவர்களின் பகல் காலமாகும். பகல் கண்டேன், நாரணனைக் கண்டேன்’’ என்பார் ஆழ்வார்.

மகாபாரதத்தில் இந்த உத்தராயண புண்ணிய காலத்தைப் பற்றிய குறிப்பு வருகின்றது. மார்கழி மாதத்தில் நடந்த மகாபாரதப் போரில், அர்ஜுனன் அம்பால் வீழ்த்தப்பட்ட பிஷ்மாச்சாரியார், உத்தராயண காலம் வரையிலேயே அம்புப் படுக்கையிலேயே, தன்னுடைய தவ வலிமையால் உயிர் போகாமல் கிடக்கிறார். அவரிடம், ‘‘தங்கள் யாருக்காக இப்படி உயிரை கையில் பிடித்துக் கொண்டு அம்புப் படுக்கையில் துன்பப்படுகிறீர்கள்? எதற்குக் காத்திருக்கிறீர்கள்?’’ என்று கேட்ட பொழுது, பீஷ்மாச்சாரியார் சொல்லுகின்றார். ‘‘உத்தராயண புண்ணிய காலத்திற்காக நான் காத்திருக்கிறேன்’’ இதிலிருந்து உத்தராயண புண்ணிய காலம் என்பது எத்தனை உயர்ந்தது என்பது தெரிகிறது.

16. எப்படி கொண்டாட வேண்டும்?

பொங்கலன்று அதிகாலை எழுந்து, வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் புதுப்பானையில் புது அரிசியிட்டு, பொங்கவைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும்.

செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பால் பொங்கும் போது மணியோசை எழுப்பி பொங்கலோ பொங்கல் என்று உரக்க எல்லோரும் சேர்ந்து உற்சாகத்தோடு சொல்ல வேண்டும். பெண்கள் குலவை இடுவதும் உண்டு.

17. ஆலயங்களில் பொங்கல் நாள்

உத்தராயண புண்ணிய காலம் பிறக்கும் நாளில், அதாவது தை முதல் நாளில் பொங்கல் உற்சவம் சகல விஷ்ணு ஆலயங்களிலும் நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் ஆயிரம் கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி தாயாருடனும் ஆண்டாளுடனும் சேர்ந்து திருமஞ்சனம் புறப்பாடு நடைபெறும். இது போலவே, மற்ற ஆலயங்களிலும் விசேஷ உற்சவம் நடைபெறும். பொங்கல் அன்று நல்ல நேரத்தில் பொங்கல் பானை வைத்து சர்க்கரைப் பொங்கல் செய்து பகவானுக்கு வழிபாடு செய்வதால், எல்லா விதமான சுகங்களும் ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

பெருமாள் ஆலயங்களை போலவே, சிவாலயங்களிலும் தை முதல் நாள் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். 1008 குடங்களில் நீர் நிரப்பி அபிஷேகம் செய்ததாக குறிப்புகள் உண்டு. செம்பியன் மாதேவியார் இந்த நாளில் பல ஆலயங்களிலும் வழிபாடு நிகழ்த்தியுள்ளார். அக்காலத்தில் சோழ மன்னர்கள் தை முதல் நாள் அன்று சிவாலயங்களில் விசேஷமான வழிபாடுகள் நடத்தியதற்காக கல்வெட்டுக்கள் உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தில் மகர சங்கராந்தித் திருவிழா 10 நாட்கள் சிறப்பு உற்சவமாக கொண்டாடப்படுவது குறித்த கல்வெட்டுகள் உண்டு.

18. மாட்டுப் பொங்கல்

உலகத்திலேயே நம்மோடு இணைந்து, நம்முடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்து வரும் மாடுகளுக்கு என்று ஒரு தனி தினம் ஒதுக்கி, பூசனைகள் செய்வது என்பது நம்முடைய பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. பொதுவாக கால்நடைகளை ‘‘செல்வம்’’ (மாடு = செல்வம்) என்பார்கள். காரணம், ஒரு மனிதனுக்கும், உழவுத் தொழிலுக்கும் மிகப் பெரிய உதவியை செய்து, அவன் வாழ்வின் பொருளாதார ஆன்மிக முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றுகிறது மாடுகள். மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை செய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில் பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு உண்டு. மாட்டுப் பொங்கல், பட்டிப் பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் சொல்வது உண்டு.

19. கணுப்பிடி, பார் வேட்டை

உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்ளும் நாள் இது. பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள். காணும் பொங்கலை, கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்பட இடம் பெறும் விழா. பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்.

பொங்கல் பானை வைக்கும் போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக் கொள்வார்கள். கணுப்பிடி இந்நாளின் சிறப்பு. இது ஒருவகை நோன்பு. உடன் பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு. காணும் பொங்கல் அன்று காக்கைக்கு அன்னமிட வேண்டும். இப்படிச் செய்தால் அந்த வருடம் முழுவதும் வளமோடு வாழலாம்.

ஆன்மிக ரீதியில் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தி, மாலையில் குதிரை வாகனத்தில் புறப்பாடு செய்வார்கள். மாடு விரட்டுதல் பார்வேட்டை உற்சவம் நடைபெறும். அவர் பசுமாட்டு கூட்டத்தினை மேய்ப்பவராக ஒரு பாவனை செய்யப்படும். சில கோயில் களில் ஆற்றுத் திருவிழாவும் நடைபெறும்.

20. ஏன் பசுவை வணங்க வேண்டும்?

பசுமாடுகளை கோமாதா என்றும், குலமாதா என்றும் கொண்டாடுகிறோம். பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் குடிகொண்டுள்ளன. பசுவை பூஜித்து வலம் வந்தால், எல்லா தெய்வங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்று எல்லா ஆன்மிக நூல்களும் கூறுகின்றன. மகாலட்சுமியின் முழு அருளும்
பசுவிடம் நிறைந்துள்ளது. பசுவை வணங்கினால் மகாலட்சுமியை வணங்கியதாகப் பொருள். எனவே மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை விதவிதமாக அலங்காரம் செய்து பூஜைகளை நடத்தி வீதியில் வலம் வருவர்.

21. தை பூசம்

மாதங்களில் தை மாதம் சிறப்பு. தை மகர ராசியைக் குறிக்கும். அதன் அதிபதி சனி. பூசம் என்பது சனிக்குரிய நட்சத்திரம். சனிக்குரிய மாதமும், சனிக்குரிய நட்சத்திரமும் இணைந்த நாள்தான் தை பூசம். ஒரு தைப்பூசத் திருநாள் அன்றுதான் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் அவருடைய திருவுருவத்திற்கு தம்முடைய சக்தி விசேஷத்தை அளித்தார் எனவே ஸ்ரீபெரும்புதூரில் அன்று கோலாகலமாக ஸ்ரீராமானுஜருக்கு திருமஞ்சனம் புறப்பாடு நடத்துவார்கள். ஸ்ரீபெரும்புதூரில் நடக்கும் இந்த உற்சவமானது “குரு புஷ்ய உற்சவம்” என்று பெயர். இது ஐந்து நாள்களுக்கு நடத்தப்படும். பூசமன்று நடைபெறும் மிக முக்கியமான விழா திருச்சேறை என்கிற திருத்தலத்தில் நடைபெறும் திருத்தேர் விழா.

22. வள்ளலாரும் தைப் பூசமும்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றும், அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என்றும் முழக்கமிட்டுப் பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா சிறப்பு வாய்ந்தது. இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய வள்ளலார் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை கட்டினார். அங்குதான் 25.1.1872 தை மாதம் 13-ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத் தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரை களாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்து விடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான்.

ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத்தான். ஏழு திரைகளை நீக்கியபிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால்தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. திரைகள் விலகியதும் அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி கண்ணாடியில் காணலாம்.

23. தையில் அவதரித்த ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும்

தை மாதம் என்பது பல ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களின் திருநட்சத்திர வைபவம் கொண்டாடும் மாதமாகும். தை மாதம் மக நட்சத்திரத்தில்தான் திருமழிசை ஆழ்வார் அவதரித்தார். அவருடைய அவதார விசேஷத்தை உபதேச ரத்தின மாலையில் குறிப்பிடுகிறார்.

“தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன் – துய்யமதி
பெற்ற மழிசை பிரான் பிறந்த நாளென்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள்’’

தை மாத புனர்பூசத்தில் எம்பார் என்கிற ஆச்சாரியரும், தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் ராமானுஜரின் வலதுகரமான கூரத்தாழ்வார் என்கின்ற ஆச்சாரியரும், தை மாதம் விசாக நட்சத்திரத்தில் நாதமுனிகளின் சீடரான யோக சாஸ்திரத்தில் வல்லவரான குருகை காவலப்பனும் அவதரித்தனர்.

24. தை வெள்ளிக்கிழமை

ஏழு நாட்களிலே வெள்ளிக்கிழமை விசேஷமான நாள். சுக்கிர வாரம் என்று சொல்லுவார்கள். மகாலட்சுமிக்குரிய நாள். வெள்ளிக்கிழமை களிலேயே ஆடி வெள்ளிக்கிழமையும் தை மாதம் வருகின்ற வெள்ளிக் கிழமையும் மிகமிக விசேஷம். அன்று தாயார் சந்நதிகளிலும், சிவாலயங்களிலும், அம்மன் சந்நதிகளிலும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். தை வெள்ளிக் கிழமை தாயார் சந்நதிகளில் மூலவர் உற்சவர்களுக்கு விசேஷமான திருமஞ்சனம் நடைபெறும். அன்று மாலை கண்ணாடி அறையில் சேவை நடைபெறும். தொடந்து பிராகார புறப்பாடு, பெருமாள் சந்நதியில் மாலை மாற்றுதல், திருவந்திக்காப்பு போன்ற வைபவங்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் விசேஷமாக நடைபெறும்.

25. நாயன்மார்களின் குருபூஜை

பல சைவ நாயன்மார்களின் குருபூஜை தினங்கள் தை மாதத்தில் வருவது சிறப்பு. கலிக்கம்பர் குருபூஜை, சிவனுக்கு கண் தந்த கண்ணப்ப நாயனார் குருபூஜை. அரிவட்டாயர் குருபூஜை, சண்டேஸ்வரர் குரு பூஜை, திருநீலகண்டர் குருபூஜை, “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே” என்று பாடிய தாயுமானவர் குருபூஜை, திருநாவுக்கரசர் மேல் சிவனினும் மேலாக அன்பு வாய்த்த அப்பூதி அடிகள் குருபூஜை என வருகிறது. ஒவ்வொரு வரலாறும் நம் ஆன்மிக உணர்வைத் தூண்டி இறையருள் பெற துணை நிற்பன.

26. தை கிருத்திகை

எப்படி வெள்ளிக் கிழமை விசேஷமோ அதைப் போல தை மாதத்தில் வருகின்ற கிருத்திகையும் விசேஷமானது. தை கார்த்திகை விரதம் முருகப் பெருமானுக்கு உரிய முக்கியமான விரதங்களில் ஒன்று. கேட்ட வரங்களையும், வாழ்க்கையில் உள்ள தடைகளை அகற்றி முன்னேற்றத்தை தரும் விரதம் கிருத்திகை விரதம். இந்த நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிச்சயம் கைகூடும்.

பதவிகளில் உயர்வான நிலையைப் பெற வேண்டும் என நினைப்பவர்கள், கிரக தோஷங்களால் திருமணத்தடை ஏற்படக் கூடியவர்கள் தை கிருத்திகை அன்று விரதம் இருக்கலாம். கொடிய நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் இந்த விரதத்தை இருக்கலாம்.

27. தை அமாவாசை

ஆடி அமாவாசையை போலவே தைமாத அமாவாசையும் மிகச் சிறப்பு வாய்ந்தது. உத்தராயண காலத்தில் முதல் அமாவாசை என்பதால் அவசியம் நீத்தார் வழிபாடு நிறைவேற்றுவது முக்கியம். தை அமாவாசை அன்று திருநாங்கூரில் (சீர்காழிக்கு அருகில்) திருமங்கையாழ்வாருக்கு மஞ்சள் குளி உற்சவம் மிகச்சிறப்பாக நடத்தப்படும். தை மாத அமாவாசைக்கு மறுநாள் உலகப் பிரசித்தி பெற்ற திருநாங்கூர் 11 கருட சேவை உற்சவம் மிகப் பிரபலமாக நடைபெறும்.

ஆயிரக்கணக்கான மக்கள் அன்றைய தினம் திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் கூடுவார்கள். இரவு 11 மணிக்கு கருட சேவையும், பகல் வேளையில் ஆழ்வார் ஒவ்வொரு திவ்ய தேச பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும். ஆழ்வார்தமிழைக் கேட்பதற்காக, ஆழ்வார் இருக்கும் இடத்திற்கு திவ்ய தேச பெருமாள்கள் வருவது வேறு எங்கும் காண முடியாத நிகழ்ச்சி.

28. ரதசப்தமி

ரதசப்தமி என்பது சூரியனுடைய ஜெயந்தி நாள்தான். அன்றைக்கு விடியற்காலை ஐந்து முப்பது மணியிலிருந்து 7 மணிக்குள் நீராட வேண்டும். அப்படி நீராடுவதற்கு முன் எருக்க இலைகள், இதனை வடமொழியில் `அர்க்க பத்ரம்’ என்று சொல்லுவார்கள். (ஏழு இலைகள்) எடுத்து தலையில் வைத்துக் கொண்டு, பெண்களாக இருந்தால் கொஞ்சம் மஞ்சளை அந்த இலை மேல் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆண்களாக இருந்தால் மங்களகரமான அட்சதையை வைத்துக் கொள்ளவேண்டும். தலையில் ஏழு இலைகளை வைத்துக் கொண்டு கிழக்கு நோக்கி நின்று சூரியனை தியானம் செய்து ஆற்றிலோ குளத்திலோ அல்லது கிணற்றடியிலோ அல்லது வேறு வழி இல்லாவிட்டால் நம்முடைய குளியல் அறையிலோ ஏழு முறை முங்கிக் குளிக்க வேண்டும். அல்லது 7 ஏழு முறை தண்ணீரை தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். ரதசப்தமி அன்று திருமலையில் ஏக தின பிரமோற்சவம் நடைபெறும்.

29. மகர ஜோதி

தை மாத முதல் நாளின் மற்றொரு சிறப்பு மகர ஜோதி. மகர சங்கராந்தி தினமான தை மாதம் 1-ஆம் தேதி மாலையில் சூரியன் மறையும் நேரத்தில், வானில் தோன்றும் ஒரு புனிதமான நட்சத்திரம் என்கிறார்கள். மற்ற நாட்களில் அது தெரியாது. சபரிமலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பொன்னம்பல மேடு இருக்கிறது. இங்கு கண்ணுக்குத் தெரியாத பொற்கோயிலில் சாஸ்தாவான ஐயப்பன் தியானத்தில் இருப்பதாகவும், இவர் தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் பேரொளியாய்த் தோன்றிப் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மகர விளக்கு என்பது மகர சங்கராந்தி தினத்தன்று மாலை நேரத்தில் காட்டில் குடியிருந்து வரும் ஆதிவாசிகள், ஐயப்பனுக்காக பொன்னம்பல மேட்டில் காட்டும் கற்பூர ஆரத்தி என்றும் சொல்கிறார்கள். எப்படி ஆயினும் இது சிறப்பான புனிதமான நிகழ்ச்சி. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசிக்கும் நிகழ்ச்சி. இதற்காக முதல் நாள் மாலை பந்தள அரண்மனையில் இருந்து ஆபரண பெட்டியில் கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.

30. அபிராமி பட்டரும், அமாவாசையும்

1. உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்கமலை என்று அபிராமி மீது ஒவ்வொரு அந்தாதியாக பாட தொடங்கிய அபிராமி பட்டருக்கு 79-ஆவது பாடலை பாடி முடித்த உடனேயே, அன்னை அபிராமிவல்லி காட்சி கொடுத்தாள். இது நடந்த தினம் தை அமாவாசை. திருக்கடையூரில் அன்னை அபிராமி தனது பக்தனுக்காக காதில் உள்ள கம்மலை கழற்சி வானத்தில் வீசி நிலவை உதிக்க வைத்து பவுர்ணமி தினமாக மாற்றினார்.

2. பொங்கல் பண்டிகை அன்றுதான் மதுரையில் கல்யானைக்கு கரும்பு அளித்த லீலை நடைபெறும்.

3. திருக்குறுங்குடி அழகிய நம்பிகள் கருட சேவை தை மாதத்தில் விசேஷம்.

4. மேல மாம்பலம் ஸ்ரீகோதண்ட ராமர் சந்நதியில் 5 நாட்கள் தெப்ப உற்சவமும் நடைபெறும்.

5. தை மாதம் அமாவாசை அன்று நாங்குநேரி தெய்வநாயகர் ஒரு கோட்டை எண்ணெய் காப்பு உற்சவம் (பத்ரதீபம்) நடைபெறும்.

இப்படி, தை மாதத்தின் பெருமையை அடுக்கிக் கொண்டே போகலாம். உலகியல் மங்கல நிகழ்வுகளுக்கு மட்டும் அல்லாது, ஆன்மிக விடியலுக்கும் வழி திறக்கும் மாதம் தை.

The post முத்துக்கள் முப்பது: தரணி போற்றும் தை மகளே, வருக! சகல நலன்களும் தருக!! appeared first on Dinakaran.

Tags : Dharani ,Kunkum Anmigam Pongal Festival ,Chitrai ,Panguni ,Margazhi… ,
× RELATED சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் 7...