×

தை பிறந்தால் வழி பிறக்கும்…

15.1-2024 பொங்கல்

12தமிழ் மாதங்களில், மாதப் பிறப்பை சிறப்பாக கொண்டாடப்படும்படியான மாதங்கள் இரண்டு. ஒன்று சித்திரை மாதம், தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது. அடுத்து தைமாதம், தைத்திருநாளாக உலகம் முழுவதிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சித்திரை, தை இரண்டு மாதங்களின் பிறப்பும் பண்டிகைகளாகக் கொண்டாடப் பட்டாலும், தை மாதப்பிறப்பு ஒட்டிய பொங்கல் பண்டிகை, நான்கு நாள் பண்டிகையாக தொடர்ந்து கொண்டாடப்படுவது சிறப்பாகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

தை முதல் நாளன்று, சூரியன் மகர ராசிக்குள் நுழையும் நேரம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இதை “மகர சங்கராந்தி” என்று கொண்டாடுகிறார்கள். சங்கராந்தி என்றால் சங்கமித்தல். அந்தி என்பது ஒரு மாதத்தின் முடிவில் மற்றொரு மாதத்தின் தொடக்கம் வரும் காலம். மார்கழி மாதத்தின் முடிவும், தை மாதத்தின் தொடக்கமும் நிகழும் நாளை, மகர சங்கராந்தி என்று சொல்லுகிறோம். ஆகம விதிகளின்படி, இது புனிதமான நாள் என்பதால், எல்லா ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

வைணவ ஆகமத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் பெருமாளுக்கு ஒரு பெயரும் உருவமும் உண்டு. தை மாதத்திற்கு உரிய தேவதை நாராயணன். நிறம் நீலம். ஆயுதம் 4 சங்குகள். திசை மேற்கு. பெருமாள் ஆலயங்களை போலவே, சிவாலயங்களிலும் தை முதல் நாள் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். 1008 குடங்களில் நீர் நிரப்பி அபிஷேகம் செய்ததாக குறிப்புகள் உண்டு. அக்காலத்தில் சோழ மன்னர்கள் தை முதல் நாள் அன்று சிவாலயங்களில் விசேஷமான வழிபாடுகள் நடத்தியதற்கான கல்வெட்டுக்கள் உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தில் மகர சங்கராந்தித் திருவிழா 10 நாட்கள் சிறப்பு உற்சவமாக கொண்டாடப்படுவது குறித்த கல்வெட்டுகள் உண்டு.

உத்தராயண புண்ணிய காலம்

12 மாதங்களை, இரண்டு ஆறு மாதங்களாகப் பிரித்து, இரண்டு அயனங்கள் கணக்கிடுகிறோம். சூரியன் வடக்கு புறமாக நகர்வது என்றும், தெற்குப்புறமாக தொடங்கி நகர்வது என்றும் கணக்கு. இதில், வடக்கு பாதையில் செல்வது உத்தராயணம் என்றும், தெற்குப் பாதையில் செல்வது தட்சிணாயணம் என்றும் சொல்லுகின்றோம். தட்சிணாயணம் முடிந்து உத்தராயணத்தின் தொடக்க நாளே தை மாதத்தின் முதல் நாள்.

பல பெருமாள் கோயில்களில் இதையொட்டி வாசல்கள் உண்டு. உத்தராயண காலத்தில் வடக்கு வாசல் மூலமாக பெருமாளைச் சேவிக்கச் செல்ல வேண்டும். தட்சிணாயண காலத்தில் தெற்கு வாசல் மூலமாக பெருமாளைச் சேவிக்கச் செல்ல வேண்டும். திருவெள்ளறை, குடந்தை சார்ங்கபாணி கோயில் போன்ற ஆலயங்களில் இந்த வாசல்கள் உண்டு. தை முதல் ஆனி மாதம் வரை ஆறு மாத காலம் உத்தராயண காலம். ஆடி முதல் மார்கழி வரை ஆறு மாத காலம் தட்சிணாயண காலம்.

மார்கழி மாதம் மகாபாரதப் போர் நடந்தது. அதில் பத்தாம் நாள் போரில், பீஷ்மர், அர்ஜுனன் அம்புகளால் துளைக்கப்பட்டு கீழே சாய்கிறார். ஆனாலும், அவர் உயிர் போகவில்லை. அம்பு படுக்கையிலேயே அவர் காத்திருக்கிறார். அவரிடத்தில் காரணம் கேட்கப்பட்ட பொழுது, “தட்சிணாயண காலத்தில் நான் உயிரைவிட விரும்பவில்லை. உத்தராயண காலத்திற்காகக் காத்திருக்கிறேன்’’ என்று சொல்லுகின்றார். உத்தராயண காலத்தின் உயர்வு குறித்து கருட புராணம் முதலிய சாத்திரங்களில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

உழைப்பின் பயனை அறுவடை செய்யும் திருநாள் “ஆடிப்பட்டம் தேடி விதை” என்று தட்சிணாயண காலத்தில் விதை விதைத்து, விளைச்சலை, உழைப்பை, உழைப்பின் பலனை, தை மாதத்திலே பெறுவார் என்பதால், `தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற ஒரு பழமொழியும் ஏற்பட்டது. ஒரு காலத்தில் பெரும்பாலான சுபநிகழ்ச்சிகள் உத்தராயண காலத்தில், வளர்பிறை பருவத்தில் நடைபெறும். திருமணங்களை முன் கூட்டியே பேசி வைத்துக் கொண்டாலும், தை பிறந்து அறுவடை எல்லாம் முடிந்து ஓய்வு காலமாக இருப்பதால், சிறப்பாகக் கொண்டாடலாம் என்று முடிவெடுப்பார்கள்.

சங்க இலக்கியங்களில்
பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை மிகப்பழமையான பண்டிகை ஆகும். சங்க இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை முதலிய இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன. “தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை;

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை

தை நீராடல்

உத்தராயண புண்ணிய காலத்தில், புண்ணிய நதிகளில் நீராடுவதும், திருக்கோயில்களில் வழிபாடு நடத்துவதும், பல்வேறு தான – தர்மங்களைச் செய்வதும், காலம் காலமாகச் செய்யப்பட்டு வருகின்றது. சங்க இலக்கியங்களில், தை மாதம் முதல் நாள் நோன்பிருந்து நீராடுவதை “தை நீராடல்” என்று மக்கள் அழைத்தனர். வைகை நதியில் அக்காலத்தில் மக்கள் நதி நீராடியதைப் பற்றிய பல குறிப்புகள் பரிபாடலில் உள்ளன.

வாசலில் நெற்கதிர் தோரணம்

தை நீராட்டு முடிந்தவுடன், பொங்கல் பண்டிகை அன்று, அறுத்த நெற்கதிர்களை வீட்டுக்கு எடுத்து வருவர். அக்கதிர்களை பகவானுக்குப் படைத்து, வீட்டின் வாயில் நிலைப்படியில் மேல், பசுஞ்சாணம் கொண்டு ஒட்டி வைப்பர். அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, பூஜை செய்வர். அதைப் போலவே, அதை அழகான வளையமாகக் கட்டி, தூக்கு கூடு போல வீட்டில் தொங்க விடுவதும் உண்டு. இன்றும் கிராமத்து பழைய வீடுகளில் மரத்தூண்களின் மேல் நெல்மணிகதிர்களால் கட்டப்பட்ட பிரிமணை வளையங்களை பார்க்கலாம். அதிலே இருக்கிற தானியங்களை பறவைகள் சிட்டுக் குருவிகள் வந்து உண்டு மகிழும். அந்தப் பறவைகள் சத்தம் வீடுகளில் கேட்கும் பொழுது மங்களங்கள் பெருகும்.

சூரியனுக்கான திருவிழா

தைப் பொங்கல் பண்டிகை சூரியனுக்கான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. சூரியன் வேதகால கடவுள். சூரியனின் பிறப்பு பற்றி பல குறிப்புகள் வேதங்களில் இருக்கின்றன. தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப முனிவருக்கும் சூரியன் பிறந்தார். சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு சாவர்ணி மனு, சனீஸ்வரன், தபதி என குழந்தைகளும் உள்ளதாக “பவிஷ்ய புராணம்’’ கூறுகிறது. சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் சந்தியா. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் யமன். பகவான் மன் நாராயணன் கண்ணிலிருந்து சூரியன் பிறந்தான் என்று ரிக்வேதம் சொல்லுகின்றது. “சஷூ ஸூர்யோ அஜாயதா’’ (புருஷ சூக்தம்) வேதங்களால் போற்றப்படும் சூரிய பகவானுக்கு உரிய விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

உழவுத் தொழிலுக்கு உன்னத விழா

நமது நாட்டில், சுமார் எழுபது சதவிகித மக்கள் விவசாயத்தில் இருக்கின்றனர். நாம் என்னதான் தகவல் தொழில் நுட்பத்தில் பலபடிகள் முன்னேறினாலும், உணவுக்கு தானியம்தான் தேவை. நூற்றி இருபது கோடி மக்களுக்குத் தேவையான உணவை விவசாய சமூகம் உற்பத்தி செய்து வருகிறது. அதனால்தான் வள்ளுவர், உழவர்கள் பின்னால்தான் எல்லோருமே போயாக வேண்டும். அவர்களையும் அவர்கள் தொழிலையும் மதியுங்கள் என்கிறார். அதற்கான விழாதான் பொங்கல் விழா. உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்கின்ற உன்னத விழாவாக இந்த தைப் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர். உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின்
செல்கின்றவரே. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கும் நிலை. உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

பொங்கலோ… பொங்கல்

உத்தராயண புண்ணிய காலமான தைப் பொங்கல் அன்று பாலில் புத்தரிசி பொங்கல் போட்டு சூரிய பகவானுக்குரிய சுலோகங்களை சொல்லி தூப – தீபம் காட்டி வழிபட வேண்டும். இதன் மூலமாக நல்ல உடல் வலிமையும் நீண்ட ஆயுளும் மனஅமைதியும் கிடைக்கும். பொங்கலன்று அதிகாலை எழுந்து, வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் புதுப்பானையில் புது அரிசியிட்டு, முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர்.

புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் குறிப்பாக அவரை, புடலை, கத்தரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. முற்றத்தில் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பால் பொங்கும் போது மணியோசை எழுப்பி ‘பொங்கலோ பொங்கல்’ என்று உரக்க எல்லோரும் சேர்ந்து உற்சாகத்தோடு சொல்ல வேண்டும்.

சூரிய பகவானுக்கு பல்லில்லாத கிரகம் என்று ஒரு பெயர் உண்டு. அதனால், அவருக்கு பொங்கல் திருநாளில் வழுக்கையான தேங்காயை படைப்பது உசிதம் என்று எழுதி இருக்கிறார் மகாபெரியவர். அந்த வகையில் இளநீர் பாயாசம் வைத்து தைத்திருநாளில் படைக்கலாம். பொங்கலன்று காய்கறி கலந்து சாதங்கள் செய்து படைக்க வேண்டும்.

மண் பண்டத்தின் பெருமை

மண் பாண்டத் தொழிலுக்கும் பொங்கல் திருநாளில் ஒரு தனி மதிப்பு இருக்கிறது. மண்பாண்டத்தில் சமைத்த உணவுகளில் மண்ணின் சுவை இருக்கும். அது அற்புதமான சுவை. இப்பொழுது தண்ணீரை வைப்பதற்கும் சில குழம்புகளை வைப்பதற்கு மட்டுமே நாம் மண் பாத்திரங்களை உபயோகப்படுத்துகிறோம். ஒருகாலத்தில் தோசைக்கல் உட்பட எல்லா வகையான சமையல் பாத்திரங்களும் மண் பாத்திரங்களாகவே இருந்துள்ளன.

மண் பானையில் உண்டாகும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உலோகப் பாத்திரங்களில் சமைக்கும்போது உண்டாவதில்லை. மண் பாண்டத்தின் பெருமையைச் சொல்வதற்காகவே அறுவடைத் திருநாளில், புது மண் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைக்கிறார்கள். மற்ற நாட்களிலும் மண்பாண்டங்களில் சமைத்து உண்ண வேண்டும். எதுவாக இருந்தாலும், பாத்திரத்தை நன்றாகக் கழுவி, சுத்தம் செய்து, சந்தனம் குங்குமமிட்டு, பாத்திரத்தின் கழுத்துப் பகுதியில், மஞ்சள் கிழங்கு, இஞ்சி உள்ளிட்டவற்றைக் கொண்டு அலங்கரித்து, பூஜையறையில் வைத்து, விளக்கேற்றி வேண்டிக்கொள்ளவேண்டும்.

ஆற்றங்கரை திருவிழா

காணும் பொங்கல் அன்று ஆற்றங்கரை திருவிழாவாக கொண்டாடுகின்றோம். அன்று சுவாமி தீர்த்தவாரிக்கு ஆற்றங்கரைக்கு வருவதோடு, மக்கள் குதூகலமாக பல விதமான விளையாட்டுக்களை விளையாடுவார்கள். பெண்கள் கும்மி கோலாட்டம் முதலியவற்றை விளையாடுவார்கள். ஒருவரை ஒருவர் இணைந்து மகிழ்ச்சியைத் தரும் திருநாளாக காணும் பொங்கல் அமைந்திருக்கிறது.

முன்னோர் பூஜைக்கு
உகந்த நாள்

உத்தராயணம் பிறக்கும் தை மாதம் முதல் தேதியும், தட்சிணாயணம் பிறக்கும் ஆடி மாதம் முதல் தேதியில், முன்னோர்கள் பூஜை செய்வதற்கு உகந்த காலங்கள். அன்று சூரிய சாளரக் கோயில் வழிபாடு செய்வது சிறந்தது. சாளரக்கோயில் என்றால் மூலஸ்தானம் நுழைவாயில் இல்லாது, எதிரே சுவற்றில் சில சன்னல்கள் அமைக்கப்பட்டு, பக்கவாட்டு கதவு வழியேதான் சுவாமியை தரிசிக்க செல்லவேண்டும். இத்தகைய சூரியசாளரக் கோயில்களில் முக்கியமானது திருவலஞ்சுழியில் உள்ள ஸ்ரீவேத விநாயகர் கோயில். தை முதல் நாளன்று இங்குள்ள தீர்த்தத்தில் தர்ப்பண வழிபாடுகளைச் செய்வதால் பலவிதமான தொந்தரவுகள் நீங்கும். சூரியக் கோயில்கள் அமைந்துள்ள சிவாலயங்களில் மூலவருக்கு சிவப்பு பட்டு வஸ்திரம் சாத்தி சிவனை வழிபட வியாபாரம் முதலியவை நல்ல முறையில் நடக்கும். தொழில் அபிவிருத்தி அடையும். பித்ரு சாபங்கள் தீரும்.

பொங்கலும் கரும்பும்

பொங்கலுக்கு கரும்பு வைத்து படைக்க வேண்டும். கரும்பு அற்புதமான உணவுப் பொருள் மட்டுமல்ல, மருந்துப் பொருளும்கூட. `கரும்பு கசந்தால் வாய்க் குற்றம்’ என்ற பழமொழியே உண்டு. அதாவது, கரும்பு சுவைக்கும் பொழுது கசப்பு வந்தால் செரிமான சுரப்பிகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். கரும்பில் உள்ள இனிப்பு மிக அற்புதமானது. உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு, மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பொருளும் கரும்பில் இருக்கிறது. அது உடலுக்கு உறுதியை தருவதோடு, உடல் சூட்டை குறைக்கும் குணம் கொண்டதாக இருக்கிறது.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

The post தை பிறந்தால் வழி பிறக்கும்… appeared first on Dinakaran.

Tags : Daimatham ,Daitila Day ,Chitra ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?