×

பெரியாறு அணை கட்டியவருக்கு ஜன. 15ல் அரசு விழா: தென் தமிழகமே கொண்டாடும் பென்னிகுக் பொங்கல்; 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி; ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரம்

கூடலூர்: பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக்கின் 183வது பிறந்தநாள் தென் தமிழக விவசாயிகளும், மக்களும் தை திருநாளில் பென்னிகுக் பொங்கலாக கொண்டாடுகின்றனர். அவர் கட்டிய முல்லைப்பெரியாறு அணையினால் தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்ததாலேயே அந்த ஆங்கிலேய பொறியாளரின் படத்தை வீடுதோறும் வைத்து ‘‘நீர் இருக்கும் வரை… நீர் இருப்பீர்’’ என தெய்வமாக வழிபடுகிறார்கள் நன்றி மறவா தமிழர்கள். 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் தமிழகத்தை வளப்படுத்தி வந்த வைகை ஆறும் பொய்த்துப் போனது.

இதனால் மதுரை, ராமநாதபுர மாவட்டங்களில் (தற்போது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்) விவசாயம் சீர்குலைந்தது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த இப்பகுதி மக்கள் பசி, பஞ்சம், பட்டிணியால் சொந்த நிலத்தை விட்டு புலம் பெயர்ந்தனர். அப்போது தமிழகத்தில் சுந்தர மலையில், சிவகிரி சிகரத்தில் உருவாகி, 300 கிலோமீட்டர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வடமேற்கு திசையில் பாய்ந்து, அரபிக்கடலில் கலக்கும் ஆற்றுநீரை தென்தமிழகம் நோக்கி திருப்பி கொண்டு வர, பல்வேறு இன்னல்களுக்கிடையே பெரியாறு அணை கட்டியவர்.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 1841ம் ஆண்டு ஜன.15ல், பென்னிகுக் பிறந்தார். அவர் தனது 19வது வயதில் ராணுவப் பொறியாளராக இந்தியா வந்தார். தனது 34வது வயதில் பெரியாறு அணை சர்வே திட்ட அதிகாரியாக பதவியேற்றார். 1886ல் சென்னை ராஜதானி மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கிடையே முல்லைப்பெரியாறு அணைதொடர்பாக 999 ஆண்டு காலத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து ரூபாய் 43 லட்சம் திட்ட மதிப்பீட்டில் முலைப்பெரியாறு அணைக்கட்டும் பொறுப்பை பென்னிகுக்கிடம் ஒப்படைத்தது ஆங்கிலேய அரசு.

பென்னிகுக் தலைமையில் பிரிட்டீஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை பெரியாறு அணை கட்டும் பணியினை மேற்கொண்டது. பல்வேறு இடையூறுகள் ஏற்பட்ட போதும், தனது இடைவிடாத முயற்சியால் 1895ல் பென்னிகுக் பெரியாறு அணையையும், சுரங்க வாய்க்காலையும் கட்டி முடித்தார். அதே ஆண்டு அக்.10ல் மதராஸ் கவர்ணர் வென்லாக் பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு தண்ணீர் திறந்து வைத்தார். இதனால் தென்தமிழகத்திலுள்ள 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெற்றதுடன் 5 மாவட்ட குடிநீராகவும் பயன்படுகிறது.

பெரியாறு அணையைக் கட்டி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய கர்னல் ஜான் பென்னிகுக் தென் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். இவரது பிறந்த நாளான ஜன. 15 தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று இருப்பதால், தென் தமிழக மக்கள் பொங்கல் விழாவை பென்னிகுக் பொங்கலாக கொண்டாடி வருகின்றனர். அவரது தியாகத்தை போற்றும் விதமாக தமிழக அரசும் லோயர்கேம்ப்பில் ரூ 1.25 கோடி செலவில் 2013ம் ஆண்டு அவருக்கு மணிமண்டபம் கட்டியது. மேலும் கடந்த 2019 முதல், ஜான் பென்னிகுக்கின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேனி மாவட்டத்தில் ஜூன் மாதம் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போதும், நாற்று நடவு, கதிர் அறுப்பின்போதும் இப்பகுதி மக்கள் பென்னிகுக்கின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்கின்றனர். மேலும் பொங்கலன்று சுருளிப்பட்டி, பாலாறுபட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஊர் பொதுமக்கள் ஓன்றுகூடி பென்னிகுக் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். மேலும் அவரது தியாகத்தை போற்றும் விதமாக இப்பகுதி மக்கள் அவரின் உருவப் படத்தில் \”நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்\” என்ற வாசகத்தோடு வீடுகள் தோறும் வைத்து வழிபடுகின்றனர். நாளை மறுநாள் லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் பென்னிகுக் பிறந்தநாள் விழாவில், கூடலூர் நகராட்சி சார்பில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில், இப்பகுதி மக்கள், விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

* சாகசம் நிறைந்த வேலை
பென்னிகுக்குடன் பணியாற்றிய பொறியாளர் எ.டி.மெக்கன்சி எழுதிய ‘‘ஹிஸ்டரி ஆப் தி பெரியார் ரிவர் பிராஜெக்ட்’’ என்னும் நூலில், அணை கட்டும்போது ஏற்பட்ட சிரமங்கள் பற்றியும் கூறியுள்ளார். அதில், கருங்கல்லை ஆறங்குல கனத்தில் உடைத்தெடுத்து அடுக்கி வைத்து சுர்க்கியும் கலவையும் உபயோகித்து அணை கட்டப்பட்டுள்ளது. வெளியில் காணப்படுகின்ற கருங்கற்கள் கீழிருந்து 120 அடி உயரம் வரை சிமென்ட் பூசப்பட்டுள்ளது. இறக்குமதி செய்த சிமென்ட்டைத்தான் இதற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. 90 அடி நீளமுள்ள தேக்கு மரங்களை வெட்டி யானைகள் மூலம் எடுத்துவரச் செய்து ‘ரோப்வே’ உருவாக்கி இதில் பக்கெட்டுகளைக் கட்டி விட்டு தேக்கடியிலிருந்து சுண்ணாம்புக் கட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. அணை கட்டுவதற்காக வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தியது என்பது சாகசம் நிறைந்த வேலையாய் இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

* அன்றைக்கு ரூ.81.30 லட்சம் செலவு
பெரியாறு அணை கட்டும் ஒப்பந்தத்தை 1886 அக்.29ல் திருவிதாங்கூர் சமஸ்தானமும், சென்னை ராஜதானியும் செய்துகொண்டாலும், 1887ல் செப்டம்பர் மாதம் பெரியாறு அணை கட்டும் வேலைக்கான முதல் கல்லை நட்டார் பென்னிகுக். அணை கட்டும் பணியில் 5000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 1895 பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது. பெரியாறு அணைக்கட்டு முகாமில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின்படி 1892 முதல் 1895 வரை 442 பேர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது மரணமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியாறு அணை கட்ட அன்றைய கணக்கின்படி 81.30 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது.

The post பெரியாறு அணை கட்டியவருக்கு ஜன. 15ல் அரசு விழா: தென் தமிழகமே கொண்டாடும் பென்னிகுக் பொங்கல்; 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி; ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரம் appeared first on Dinakaran.

Tags : Periyar dam ,15th Government Festival ,South Tamil Nadu ,Pennycook Pongal ,Cuddalore ,Colonel ,John Pennycook ,Jan. 15th Government Festival ,South ,Tamil ,Nadu ,Pennycook ,Pongal ,Dinakaran ,
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல்...