×

சிறாவயலில் ஜன.17ல் மஞ்சுவிரட்டு முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சர் ஆய்வு

திருப்புத்தூர், ஜன. 13: திருப்புத்தூர் அருகே சிறாவயலில் வரும் ஜன.17ம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெறுவதையொட்டி நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மஞ்சுவிரட்டிற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே சிறாவயலில் நடைபெறவுள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாவட்ட காவல்துறை எஸ்.பி.,அரவிந்த் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து மஞ்சுவிரட்டு திடலில் மாவட்ட ஊராட்சி நிதி, மாவட்ட கவுன்சிலர் மஞ்சரிலெட்சுமணன் நிதிபரிந்துரையின் மூலம் ரூ.8.12 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மேடையை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். மேலும் அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு என்பது மாநில அளவில் புகழ்பெற்றதாக திகழ்ந்து வருகிறது. இத்தகைய வீர விளையாட்டானது சுமார் 300 ஆண்டுகளாக தொடர்ந்து தொன்று தொட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றி, இவ்விழா சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக இன்றைய (நேற்று) தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பங்கேற்க வரும் காளைகள் இருக்கும் பகுதி, காளைகள் அவிழ்த்து விடும் பகுதி, பார்வையாளர்கள் பகுதி, மாடுபிடி வீரர்கள் நிற்கும் பகுதி மற்றும் பாதுகாப்பு பணிகள் ஆகியவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் கால்நடை பராமரிப்புத்துறை,

மருத்துவத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட துரை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். ஆய்வின் போது, திருப்புத்தூர் டி.எஸ்.பி.,ஆத்மநாதன், கோட்டாட்சியர் பாலுதுரை, வட்டாட்சியர் ஆனந்த், கல்லல் திமுக ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார், துணை அமைப்பாளர் ராஜா, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post சிறாவயலில் ஜன.17ல் மஞ்சுவிரட்டு முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Manjuvirat ,Charavayal ,Tiruputhur ,Manjuvirattu ,Minister ,Cooperatives ,KR Periyakaruppan ,Chiravayal ,Tiruputhur, Sivagangai district ,Dinakaran ,
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு